ராஜிவ் காந்தி, பத்மநாபா என இறுதியில் பிரபாகரனும் கொலை செய்யப்பட்டார்!

Report Print Shalini in அரசியல்

உலகின் எந்த நாடாக இருந்தாலும், அங்கு ஒரு ஒப்பந்தம் வந்தால் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அப்படித்தான் இந்திய - இலங்கை ஒப்பந்தத்திலும் பிரச்சினை எழுந்தது என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இந்திய பத்திரிகையாளர் தி.ராமகிருஷ்ணனின் “ஓர் இனப்பிரச்சினையும், ஓர் ஒப்பந்தமும்” என்ற நூல் அறிமுக விழா யாழ். முகாமையாளர் சங்கத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்திய - இலங்கை ஒப்பந்தம் என்பது தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக கொண்டு வரப்பட்டது.

இதில் வடகிழக்கு இணைப்பு தற்காலிகமானது என கூறப்பட்டாலும், ராஜிவ் காந்தி மற்றும் தமிழ் தலைமைகள் அல்லது இயக்கங்களுக்கு இடையில் எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காகவே இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் இறுதியில் என்ன நடந்தது. ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டார். ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் ஸ்தாபக தலைவர் பத்மநாபா உட்பட 12 பேர் கொலை செய்யப்பட்டார்கள், இறுதியாக பிரபாகரன் கொலை செய்யப்பட்டார். அவருடன் ஆயிரக்கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்டர்கள்.

ஆனால் தற்போது எமது ஒப்பந்தம் எங்கே இருக்கின்றது. தமிழ் மக்களுக்கான தீர்வு எங்கே இருக்கின்றது?

உலகளாவிய ரீதியில் இனப்பிரச்சினை வந்தபோது ஒவ்வொரு நாடுகளுக்கும் பின்னால் ஒரு நாடு துணையாக நின்றது. அவ்வாறு எமக்கு பிரச்சினை வந்தபோது நாம் இந்தியாவை நம்பினோம்.

எமது நட்பு நாடு, அருகில் இருக்கும் நாடு, தமிழ் மக்கள் வாழும் நாடு என்ற ரீதியில் தமிழ் நாட்டை எமது தாய் நாடாக எண்ணினோம்.

ஆனால் தற்போது இலங்கைத்தமிழர்கள் எங்கு வந்து நிற்கின்றார்கள். இந்தியாவில் அதிகாரப்பகிர்வு இருக்கின்றது. அதைத்தானே நாமும் கேட்கின்றோம் என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.