வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர் யார்?

Report Print Habil in அரசியல்

2013ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட தற்போதைய வடக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் இன்னும் ஆறு மாதங்களில் முடியவுள்ள நிலையில் அடுத்த மாகாண சபையைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் மீது அனைவரதும் கவனம் திரும்பத் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணசபைகளின் ஆயுட்காலம் முடிந்து விட்ட நிலையிலும், அவற்றுக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை.

மாகாணசபைத் தேர்தல் சட்டத்தை திருத்தும் யோசனை பாராளுமன்றத்தில் இன்னமும் நிறைவேற்றப்படாத நிலையில் அதனை முன்னெடுப்பதா, இல்லையா? என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

இதனால் வரும் ஒக்டோபர் மாதம் வடக்கு மாகாண சபையின் ஆயுள் முடிந்த பின்னர் உடனடியாக அதற்குத் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இருக்குமா என்ற சந்தேகம் காணப்பட்டாலும் கூட வடக்கு மாகாணசபைத் தேர்தலை நோக்கிய நகர்வுகள் மாத்திரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வடக்கு மாகாணசபைத் தேர்தல் களத்தில் பல கட்சிகள் களமிறங்குவதற்கான தயார்படுத்தல்களில் இறங்கியிருக்கின்ற சூழலில் முதலமைச்சர் பதவிக்காக களமிறங்கப் போகிறவர்கள் யார் என்ற கேள்வி நீடிக்கிறது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீண்டும் முதலமைச்சர் பதவிக்குப் போடடியிடுவாரா என்ற கேள்விக்கு அண்மையில் முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமக்கு போட்டியிட வாய்ப்பளிக்கும் என்று நம்பவில்லை எனவும், புதியதொரு கட்சி அல்லது கூட்டணியை அமைத்துப் போட்டியிடும் வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் அண்மையில் கேள்வி பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

எனவே அவர் அடுத்த மாகாணசபைத் தேர்தலிலும் முதலமைச்சர் பதவிக்கான வேட்டபாளராக களமிறங்கப் போகிறார் என்பது உறுதியாகியுள்ளது.

அதேவேளை வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக சீ.வி.விக்னேஸ்வரனை மீண்டும் களமிறக்கப் போவதில்லை என்று அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருந்தார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனை் தனியான அணியொன்றை உருவாக்கி போட்டியிட முனையும் போது வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாரை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப் போகிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்களின் பெயர்கள் ஊகங்களாக வெளியாகின்றன.

மீண்டும் விக்னேஸ்வரனை கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப் போவதில்லை என்று சுமந்திரன் கூறிய பின்னர் மாவை சேனாதிராசாவிடம் அதுபற்றிக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பிடிகொடுக்காமல் பதிலளித்திருந்தார். தாமோ கட்சியோ வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவது பற்றி முடிவு செய்யவில்லை என்று கூறியிருந்தார்.

அதுபோலவே விக்னேஸ்வரன் தனது நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கூட பொருத்தமான நேரத்தில் பொருத்தமான முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்போம் என்று கூறியிருந்தார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை வெளிப்படுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயங்கி வருகிறது.

விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்று சுமந்திரன் அறிவித்த பின்னர் இரா.சம்பந்தனுடன் முன்னர் நெருக்கமாக அருந்த அரசியல் ஆய்வாளர் ஒருவர் சமூக ஊடகம் ஒன்றில் கருத்துகளை பகிர்ந்திருந்தார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தல் காலத்தில் இரா.சம்பந்தன் அவருக்கு கூறியிருந்த கருத்து அது.

சாதாரணமான ஒரு மாகாணசபை எனின் முதலமைச்சர் வேட்பாளராக நான் சேனாதியை நிறுத்தியிருக்கலாம். ஆனால் வடக்கு மாகாணசபை முக்கியத்துவம் மிக்கது. அதற்கு முதலமைச்சராக வருகின்றவர் சர்வதேச தலைவர்களோடு சமமாக உட்கார்ந்து பேச வல்லவராக இருக்க வேண்டும்.

உண்மையில் முதலமைச்சர் வேட்பாளராக நான் சுமந்திரனையே நிறுத்த விரும்பினேன். ஆனால் அரசியலுக்குப் புதியவராக அவர் இருப்பதனால் அவர் இன்னும் சற்று அனுபவத்தினைப் பெற வேண்டியுள்ளது.

அதுவரையில் அரசியல் தீர்வினைத் தேடும் முயற்சிகளில் அவர் எனக்கு உறுதுணைாயக இருப்பார்.

சர்வதேச உரையாடல்களுக்குத் தேவையான ஒருவரே வடக்கின் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பதும், அதற்கு சுமந்திரனே பொருத்தமானவர் என்பதும் சம்பந்தனின் கருத்து என்பதை அவரது பதிவு உணர்த்துகிறது.

ஆனாலும் இரா.சம்பந்தன் இன்னொன்றையும் கூறியிருக்கிறார். சுமந்திரன் அரசியலுக்குப் புதியவர். அவர் இன்னும் அனுபவங்களைப் பெற வேண்டியவராக இருக்கிறார் என்பதே அது. அது முக்கியமானதும் கூட.

சுமந்திரன் அரசியலுக்கு வந்து எட்டு ஆண்டுகளாகி விட்டன. ஆனாலும் அவர் அரசியலின் நெளிவு சுழிவுகளை இன்னமும் கற்றுக்கொண்டு விட்டார் என்று கூறமுடியாது.

ஏனென்றால் இன்று தமிழ் தேசிய அரசியலில் அதிகம் கல்லெறிபடுபவராக அவரே இருக்கிறார். காய்க்கிற மரத்துக்குத் தான் அதிகம் கல்லெறி விழும் என்ற நியாயம் அவருக்குப் பொருத்தமுடையதோ தெரியவில்லை.

விக்னேஸ்வரன் - சுமந்திரன் இடையான பூசல்களே கூட்டமைப்புக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான பூசலாக மாறியது என்ற கருத்தும் பலரிடம் உள்ளது.

இருந்தாலும் விக்னேஸ்வரனுக்கு எதிராக முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசாவையா சுமந்திரனையா கூட்டமைப்பு முன்னிறுத்தப் போகிறது என்ற கேள்வி இருக்கிறது.

ஆனால் இந்த இரண்டு பேருமே தற்போது முதலமைச்சர் பதவிக்காக விக்னேஸ்வரனுடன் மோதத் தயாராக இருக்கிறார்களா என்பது சந்தேகம் தான்.

ஏனென்றால் தம்முன் நிற்பது பலம் வாய்ந்த வேட்பாளரான விக்னேஸ்வரன் என்றதும் இவர்கள் பின்வாங்கும் சாத்தியங்கள் உள்ளன. மாவை சேனாதிராசா நழுவலாகவே தமது கருத்தைக் கூறியிருந்தார்.

சுமந்திரனிடம் அண்மையில் இதுபற்றிக் கேள்வி எழுப்பப்பட்ட போது முதலமைச்சர் வேட்பாளராக தான் போட்டியிடப் போவதில்லை என்றும் அப்படியொரு எண்ணம் தனக்கு இருந்ததில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதைவிட கட்சியும் அப்படியொரு முடிவை எடுக்காது என்றும் கூறியிருந்தார்.

அவ்வாறாயின் முதலமைச்சர் வேட்பாளராக கூட்டமைப்பு யாரை முன்னிறுத்தப் போகிறது.

முதலமைச்சர் வேட்பாளர் என்று எவரையாவது அறிவிப்பதாயின் அவர் வலுவானவராக இருக்க வேண்டும்.

கடந்த மாகாணசபைத் தேர்தலின் போது மகிந்த ராஜபக்ச அரசும் ஈபிடிபியும் இணைந்து வடக்கு மாகாணசபையைக் கைப்பற்ற முயற்சித்த போது சவால் மிகக் கடுமையாக இருந்தது.

அதனை முறியடிக்கப் பலமான வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டிய தேவை காணப்பட்டது. அப்போது ஈபிடியியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவே முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுவார் என்றும் எதி்பார்க்கப்பட்டது.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை அறிவித்ததும் டக்ளஸ் தேவானந்தா பதுங்கிக்கொண்டார். அவர் சின்னத்துரை தவராசாவை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்திருந்தார்.

ஆனால் மாகாணசபைத் தேர்தலில் ஈபிடிபியின் முதலமைச்சர் வேட்பாளர் தவராசாவும் கூட தோல்வி கண்டார். கொலை வழக்கொன்றில் சிக்கிய ஈபிடிபியின் மாகாணசபை உறுப்பினராக இருந்த கமல் சிறைக்குச் சென்ற பின்னர் அவருக்குப் பதிலாகவே தவராசா மாகாணசபைக்குள் நுழைய முடிந்தது.

ஆனால் இம்முறை டக்ளஸ் தேவானந்தாவும் கூட முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. அதற்குக் காரணம் அப்போது ஆளும் கட்சியில் இருந்து பலத்தை நிரூபிக்க முடியாது போன ஈபிடிபி அரசாங்கத்தில் இல்லாமையே உள்ளூராட்சித் தேர்தலில் கணிசமான ஆசனங்களைக் கைப்பற்றி இருக்கிறது.

அரச எதிர்ப்பு அலையும் ஈபிடிபிக்குப் பாதகமாக இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு வேறு. சரிந்து கிடக்கிற முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனியாகப் போட்டியிடப் போகிறார்.

எனவே இந்தச் சாதகமான சூழ்நிலைகளை பயன்படுத்திக் கொள்ளும் வாயப்பு டக்ளஸ் தேவானந்தாவுக்கு இனிமேலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே அவரும் முதலமைச்சர் வேட்பாளராக களத்தில் குதிக்கும் சாத்தியங்கள் உள்ளன.

ஆனால் இத்தகைய நிலையில் தமடிழ் தேசியக் கூட்டரைமப்புக்குத் தான் யாரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவது என்ற குழப்பம் ஏற்படும்.

இது சிக்கலான தருணம் எதிர்தரப்புகள் வலுவாகவும் அணிகள் சேர்ந்தும் போட்டியிடப் போகும் சூழலில் கூட்டமைப்பினால் ஆட்சியமைக்கு முடியாத நிலை கூட ஏற்படலாம்.

அவ்வாறானதொரு ஆட்டத்தில் தம்மைப் பணயம் வைக்க கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் யாரும் விரும்பாமலும் போக வாய்ப்புகள் உள்ளன.

அப்படியான நிலை ஒன்று ஏற்பட்டால் கடந்த முறை ஈபிடிபி செய்தது போன்று முக்கியத்துவம் இல்லாத ஒருவரை போட்டிக் களத்தில் நிறுத்தக் கூடும் அல்லது யாரை முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவிக்காமல் விடக்கூடும்.

முதலமைச்சர் வேட்பாளராக யாரையும் அறிவிக்காது போனால் அது கூட்டமைப்பின் பலவீனமாகப் பார்க்கப்படும். அதேவேளை முக்கியத்துவம் குறைந்தவர்களை நிறுத்தினால் தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார்கள் என்றும் விமர்சனங்களை ஏற்படுத்தும்.

கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் விக்னேஸ்வரன் இல்லாத ஒரு அணியை களத்தில் இறக்கும் முடிவை எப்போதோ எடுத்து விட்டாலும் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று தீர்மானிப்பது அவர்களுக்கு கடைசிவரையில் பெரும் நெருக்கடியாகவே இருக்கப் போகிறது.