விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் முடியாததை வேறு எவராலும் செய்ய முடியாது

Report Print Nesan Nesan in அரசியல்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் பெற்றுத்தரமுடியாத தமிழீழத்தினை எந்த அரசியல்வாதியினாலும் பெற்றுத்தர முடியாது என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.

எமது தேசியத்தலைவர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினை ஆரம்பிக்கும்போது தனது பலத்தினை கொண்டே ஆரம்பித்தார் (தன்னிடம் இருந்த பணத்தைக்கொண்டே கைத்துப்பாக்கியை வாங்கினார்.) அதுபோன்றே நானும் இந்த பயணத்தினை தொடங்கும்போது என்னிடம் உள்ள பணத்தினை கொண்டுதான் ஆரம்பித்து இருக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் மட்டக்களப்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

சென்றமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முள்ளிவாய்க்கால் நிகழ்விற்குச்சென்று பேசும்போது பயங்கரவாதிகள் அழிந்ததன் பின்னரே இவ்வாறான நிகழ்வை நடத்த முடிகின்றது என்று பேசும்போது அவருக்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது, அப்போது சுமந்திரன் உடனடியாகவே தனது வாகனத்தில் ஏறிச்சென்றதனை நான் நேரடியாகவே பார்த்தவன்.

நாம் தொடங்கியிருக்கும் கட்சி அரசியல் கட்சி அல்ல, போராளிகள் கட்சி, நாம் அரசியல் தலைவர்களை நம்பியிருந்தோம், அவர்கள் எங்களை மதிக்கின்றார்கள் இல்லை எங்களை ஏறி மிதிக்கும் அளவிற்குத்தான் அவர்களது செயற்பாடு காணப்படுகின்றது.

இன்றுள்ள அரசியல்வாதிகள் அனைவரும் கதிரைக்கு சண்டைபோடுகின்றார்கள், இன்றைக்கு இருக்கின்ற அரசியல் வாதிகள் போன்று எங்களை நினைக்காதீர்கள், அது கஜேந்திரகுமார் பொன்னம்பலமாக இருக்கலாம், கருணாவாக இருக்கலாம், பிள்ளையானாக இருக்கலாம், சம்பந்தன் ஐயாவாக இருக்கலாம் இவர்கள் போன்று நாங்கள் அல்ல நாங்கள் ஒரு போராளிகள் கட்சி என்பதனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஈழப் போராட்டத்தில் இறுதிக்கட்ட யுத்தம் கிழக்கிலேயே ஆரம்பிக்கப்பட்டது, மாவிலாறு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்றது, இது யாவரும் அறிந்ததே ஆகையினாலேயே நாம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிப்பு நிகழ்வை வாகரை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பால்சேனை பகுதியில் நினைவுகூர ஏற்பாடுகள் செய்துள்ளோம்.

அந்தவகையில் இந் நினைவேந்தல் நிகழ்வில் எமக்காக கிழக்குப்பல்கலைக்கழக மாணவ ஒன்றியம், இளைஞர் ஒன்றியம், வாகரை இளைஞர்கள் மற்றும் எமது புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் எமக்கு ஆதரவு வழங்குவதற்காக முன்வந்துள்ளனர்.

அத்துடன் இந்நினைவேந்தல் நிகழ்வில் யாவரும் இன, மத, பிரதேச வேறுபாடுகள் இன்றி உயிர்நீர்த்த உறவுகளுக்காக நினைவுகூர வேண்டுகோள் விடுப்பதுடன் இதனை சாதகமாக சுயநலம் காணசிலர் முற்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.