கொலையாளிகளின் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் தொடர்பான சட்டம் 9ம் திகதி நாடாளுமன்றத்திற்கு

Report Print Steephen Steephen in அரசியல்

ஊழல்வாதிகள், கொலையாளிகளின் வழக்குகளை தினமும் விசாரிக்கும் வகையில் நீதிமன்றம் ஒன்றை ஏற்படுத்தும் சட்டமூலம் எதிர்வரும் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும் எனவும் இதன் பின்னர் தினமும் வழக்குகள் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் கொண்டு வர முடியும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய ஊழல்வாதிகள், கொலையாளிகளுக்கு சட்டத்தின்படி தண்டனை வழங்கப்படும்.

இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதன் மூலம் 2020 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி பெரும் வெற்றியை பெறக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.

2018 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சியினரின் ஆண்டு. தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பங்களிப்பை செய்த அனைத்து தரப்பினருக்கும், ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகி பதவி உயர்வுகள் கிடைக்காதவர்கள், ஊதிய உயர்வு கிடைக்காதவர்களுக்கு பிரதமரின் கையால் அவை மீண்டும் வழங்கப்படும்.

விவசாயிகளின் கடன்கள் இரத்துச் செய்யப்படும். சிரேஷ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும்.

2015 ஆம் ஊழல் நிறைந்த அரசாங்கத்தை கவிழ்த்து நல்லாட்சியை ஏற்படுத்தி பின்னர் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் வழங்கிய வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றியுள்ளோம்.

ஊழல்வாதிகள், கொலையாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நல்லாட்சி அரசாங்கம் மீதுள்ள ஒரு குற்றச்சாட்டு மத்திய வங்கியின் பிணை முறி சம்பந்தமானது மட்டுமே. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் டன் கணக்கில் நிதி மோசடிகளும், கொள்ளையடிப்புகளும் நடந்தன. அவற்றுடன் ஒப்பிடும் ஒரே ஒரு தவறு மட்டுமே தற்போதைய ஆட்சியில் நடந்துள்ளது.

மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் எமது தரப்பினரும் தேர்தல்களில் பேச ஆரம்பித்தனர். இதன் காரணமாகவே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது. மேலும் 16 பேர் இந்த ஊழல் பற்றி பேசினர்.

அவர்கள் 16 பேரும் தற்போது அரசாங்கத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்கள் அரசாங்கத்தில் இருக்கவே எதிர்பார்த்தனர். எனினும் ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற நேர்ந்தது.

தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரித்தது. சமுர்த்தி கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டன. இந்த கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டவர்கள் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்தனர்.

ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்தவர்களுக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் கிடைக்கவில்லை. அந்த துறைக்கு பொறுப்பாக இருந்த எஸ்.பி. திஸாநாயக்கவே இதற்கு காரணம்.

தற்போது சமுர்த்திக்கு பொறுப்பான அமைச்சர் எங்களிடம் இருக்கின்றார். சமுர்த்தி கிடைக்காதவர்கள் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியினருக்கு இந்த ஆண்டுக்குள் சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குமாறு நான் எமது அமைச்சரிடம் கூறினேன்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது பிரதமருக்கு எதிராக வாக்களித்தவர்கள் அரசாங்கத்தில் இருக்கவே முயற்சித்தனர். அவர்களின் வெட்க நரம்பு வெட்டப்பட்டுள்ளது.

இவர்கள் 16 பேரையும் கட்டாயம் வெளியேற்ற வேண்டும் என நான் கூறியிருந்தேன் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.