ஜனாதிபதி தேர்தலில் மகிந்த தரப்பு வேட்பாளர்?

Report Print Samy in அரசியல்
445Shares

அடுத்த ஜனாதிபதி பதவிக்கான தேர்தலுக்கு இன்னமும் 18 மாதங்கள் கால அவகாசமுள்ளது. ஆனால் அது குறித்த வாதப் பிரதிவாதங்கள், எதிர்வு கூறல்கள் என அரசியல் நிலமை இப்பொழுதே பரபரப்பாகி வருகின்றது.

இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா என்பது குறித்து நிச்சயப்படுத்திக் கொள்ள இயலவில்லை.

கடந்த 2015ஜனாதிபதி தேர்தல் பரப்புரையின் போது தாம் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ஒழித்துக் கட்டிவிட்டு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கிக் கொள்ளப் போவதாக அவர் தெரிவித்து வந்திருந்தார்.

ஆயினும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திசநாயக்க போன்றே ஐ.ம.சு.கூட்டணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீரவும் கூட, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவே என பல சந்தர்ப்பங்களில் தெரிவித்து வந்துள்ளனர்.

அதேவேளை ஐ.தே.கட்சியைப் பொறுத்தவரை, அடுத்த ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் அந்தக் கட்சிக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததொன்று.

முன்னைய 2010ஆம் மற்றும் 2015ஆம் ஆண்டுகளின் ஜனாதிபதிக்கான தேர்தலில் ஐ.தே.கட்சி தனது சார்பாக வேட்பாளர் எவரையும் நிறுத்தியதில்லை.

2010ஆம் ஆண்டுத் தேர்தலில் ஐ.தே.கட்சி ஆதரவளித்த பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தோல்வி கண்டதுடன், 2015ஆம் ஆண்டுத் தேர்தலின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஐ.தே.கட்சியின் ஆதரவுடன் வெற்றி பெற்றிருந்தமை சகலரும் அறிந்ததொன்றே.

அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தல் குறித்து ஐ.தே.கட்சி இதுவரை எந்தவொரு முடிவையும் மேற்கொள்ளவில்லை. தற்போது பிரதமராகவுள்ள ரணில் விக்கிரமசிங்கவைத்தான் ஐ.தே.கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தவுள்ளது.

இது குறித்து எதிர்காலத்தில் மாற்றமெதுவும் ஏற்படுமா என்பது தெரியவில்லை என ஐ.தே.கட்சியின் சி।ரேஷ்ட தலைவர்களில் ஒருவரான ஜோன் அமரதுங்க அண்மையில் கருத்து வௌியிட்டிருந்தார்.

அதேவேளை இதுவரை காலமும் இடம்பெற்ற ஜனாதிபதி பதவிக்கான தேர்தல்கள் ஒவ்வொன்றிலும் ஜே.வி.பி.தரப்பு வெவ்வேறு, மாறுபட்ட விதத்திலான நிலைப்பாடுகளைக் கடைப்பிடித்து வந்திருந்தது.

அந்த வகையில் 1982ஆம் ஆண்டின் ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் ஜே.வி.பியின் தலைவர் ரோகண விஜேவீர போட்டியிட்டிருந்தும், அவர் அந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருந்தார். 1989ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலை ஜே.வி.பி முற்றுமுழுதாக புறக்கணித்திருந்தது.

அதுமட்டுமன்றி, ஆயுதப் போராட்டம் மூலம் அதற்கு எதிர்ப்பையும் வௌிப்படுத்தியிருந்தது. ஜே.வி।.பி ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது ஜனாதிபதி தேர்தலான 1994ஆம் ஆண்டுத் தேர்தலில் ஜே.வி.பி சார்பில் நிஹால் கலப்பத்தி போட்டியிட்ட போதும், குறித்த தேர்தலில் போட்டியிட்ட சந்திரிகா, தாம் வெற்றியீட்டினால் நிறைவேற்று ஜனாதிபதி நடைமுறையையே ஒழித்து விடுவதாக எழுத்து மூல உறுதி வழங்கியதையடுத்து நிஹால் கலப்பத்தி போட்டியினின்றும் விலகிக் கொண்டார்.

அதேவேளை 1999ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரித் தரப்பினரது பொது வேட்பாளராக நந்தன குணதிலக போட்டியிட்ட போதிலும், குறித்த தேர்தலில் அவர் தோல்வியுற நேர்ந்தது.

2005ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி சார்பான வேட்பாளர் எவரையும் நிறுத்தாது சுதந்திரக் கட்சி சார்பான வேட்பாளர் மகிந்த ராஜபக்சவுக்கு ஜே.வி.பி ஆதரவு வழங்கிச் செயற்பட்டது.

2010ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவுடன் முரண்பட்ட நிலையில் இருந்து வந்த ஜே.வி.பி, எதிரணியின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகவுக்கு ஆதரவளித்த போதிலும், குறித்த ஜனாதிபதிக்கான தேர்தலில் சரத் பொன்சேகா தோல்வியைத் தழுவ நேர்ந்தது.

மகிந்த ராஜபக்ச இரண்டாவது தடவையும் நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2015ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி வௌிப்படையாக எவருக்கும் ஆதரவு வழங்காத போதிலும், மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டுடன் செயற்பட்டது.

அந்த வகையில் அந்தத் தேர்தலில் பொது எதிரணி சார்பாகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று நாட்டின் ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றிக் கொண்டார்.

அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தலில் ஜே.வி.பியினர் எத்தகைய நிலைப்பாட்டைக் கைக்கொள்வர் என்பது குறித்து தௌிவாகத் ஊகிக்க இயலாத போதிலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழித்தாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் தற்போதும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பிலும் பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளமை உண்மையே.

கடந்த பெப்ரவரி மாதம்10ஆம் திகதியன்று இடம்பெற்ற உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் போட்டிக் களத்தில் மகிந்தவின் புதிய கட்சியான தாமரை மொட்டு கட்சி குறிப்பிடத்தக்க அளவுக்குச் சாதகமான வெற்றியை ஈட்டியுள்ளது.

உண்மையில் மகிந்தவின் ஆதரவுத் தளம் பெருமளவில் அதிகரித்துள்ள போதிலும், அரசமைப்புக்கான 19ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமையால் மகிந்தவால் மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதிக்கான தேர்தலில் போட்டியிட இயலாது போயுள்ளது.

எனவே மகிந்த தரப்பின் அடுத்த ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் எவரென மகிந்த தரப்பினர் இதுவரை எவரது பெயரையும் உறுதிப்படுத்தி அறிவித்திராத போதிலும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே அவ்விதம் பொது எதிரணி சார்பான வேட்பாளராக களம் இறக்கப்படுவார் எனப் பேசப்பட்டு வருகிறது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய மகிந்த தரப்பு வேட்பாளராகப் போட்டியிடவுள்ளமை குறித்த அச்சத்தாலேயே மைத்திரிபால அரசு அவர் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி சிறையில் அடைக்க முயல்வதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்து வருகிறார்.

அதேவேளை மகிந்த தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர், மகிந்த ராஜபக்ச அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இயலாத நிலையில், தற்போதுள்ள தமது தரப்பினர்கள் குறித்த தேர்தலில் போட்டியிடத் தகுதியானவர் கோத்தபாயவே என உறுதியாகத் தாம் நம்புவதாகத் தெரிவித்து வருகின்றனர்.

தேர்தலுக்கு இன்னமும் போதிய கால இடைவௌி உள்ளதால், அது குறித்து இப்போதே உறுதிப்படுத்தினால் அரசு எவ்விதத்திலாவது கோத்தபாயவுக்கு இடையூறு விளைவிக்கவே முயலும் என்பதால், உரிய வேளையிலேயே அந்த முடிவு உறுதிப்படுத்தப்படுமெனவும் அவர்கள் கருத்து வௌியிட்டு வருகின்றனர்.

அதேவேளை நாம் அறிந்த வரையில், ஐ.தே.கட்சி சார்பாக ரணிலும், சுதந்திரக் கட்சி சார்பாக மைத்திரிபாலவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கூடும் என்பதால், எமது தெரிவு கோத்தபாயவே எனக் கூட்டு எதிரணித் தரப்பினர் கூறிய போதிலும், சிறுபான்மை இனத்தவர்களது வாக்குகளே ஜனாதிபதி தேர்தலில் வெற்றியைத் தீர்மானிப்பவை என்ற யதார்த்தத்தைப் புறமொதுக்க இயலாதுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் தமிழ் முஸ்லிம் மக்கள் மகிந்தவைப் புறக்கணித்ததாலேயே, மகிந்த ராஜபக்ச தோல்வியுற நேர்ந்தது என்ற அடிப்படையில் எதிர்வரும் தேர்தலில் கோத்தபாயவால் சிறுபான்மை இனத்தவர்களது ஆதரவை ஈட்ட இயலுமா என்ற கேள்வி தலைதூக்குகிறது.

2015ஆம் ஆண்டில் உருவான கூட்டு அரசின் நிர்வாகத்தில் தாம் பெரும் ஏமாற்றத்துக்கு உட்படநேர்ந்ததாக சிறுபான்மை இனத்தவர்கள் தற்போது உணர்ந்து கொண்டுள்ளனர். ஆதலால் சிறுபான்மை இனத்தவர்களும் தற்போது மகிந்தவின் பின்னால் அணிதிரள ஆரம்பித்துள்ளனர்.

அது மட்டுமன்றி, தமிழ்க்கட்சிகளும் தற்போது ஒன்றுக்கொன்று முரண்பட்டுள்ளமை தமிழ் மக்களை அவர்கள் மீது அதிருப்தியடைய வைத்துள்ளது. எனவே இன்று நாட்டின் சகல இன மக்களும் ஜனாதிபதி தேர்தலை எதிர்பார்த்துள்ள நிலையே நிலவுகிறது என கூட்டு எதிரணியின் சிரேஷ்ட அரசியல்வாதிகள் அடித்துக் கூறுகின்றனர்.

அதேவேளை இலங்கை அரசியலில் இடதுசாரி கொள்கை கோட்பாடுகளைத் தொடர்ந்து பேணி வருபவரும், உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் நன்மதிப்பை ஈட்டியுள்ள இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார இது பற்றிக் கருத்து வௌியிடுகையில், ‘

எமது தெரிவு ராஜபக்ச குடும்பத்து உறுப்பினரொருவரான சமல் ராஜபக்சவே. மென்போக்கு அரசியல்வாதியான சமல் நிறைவேற்று அரச தலைவர் பதவியை ஒருபோதும் தவறான விதத்தில் பயன்படுத்த விரும்பாத போக்குடையவர். எனவே தான் சமல் ராஜபக்சவே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரித் தரப்பினரது தெரிவாகிறார்.’’ எனத் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் அண்மையில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்து, தமது அமைச்சுப் பதவிகளையும் கைவிட்டு எதிர்க்கட்சி வரிசையில் இணைந்து கொண்ட 16நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான எஸ்.பி.திசநாயக்க இந்த விடயம் குறித்து கருத்து வௌியிடுகையில், ‘

நாம் அரசிலிருந்து வௌியேறி விட்டாலும் ஐ.ம.சு.முன்னணியின் அங்கமான சுதந்திரக் கட்சியிலேயே தொடர்ந்தும் அங்கம் வகிக்கிறோம். எனவே, அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான எமது தெரிவு மைத்திரிபால சிறிசேனவே ஆவார்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர, தமதும், தமது கட்சியினதும் அடுத்த ஜனாதிபதி வேட்பாளருக்கான தெரிவு கோத்தபாய ராஜபக்சவேயாவார் எனத் தெரிவித்திருந்தார். ‘

நாட்டை நேர் சீராக்கி, முப்பது ஆண்டுகள் காலமாக நாட்டில் நிலவி வந்த பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க திறமைமிக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பணியாற்றி, நாட்டைப் பாதுகாத்தவர் கோத்தபாயவே’’ என்றார் அவர்.

அதே சமயம் இலங்கை இராணுவத்தில் சேவையாற்றி ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவும், ‘‘அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான மகிந்த தரப்பு வேட்பாளராகும் தகுதி கோத்தபாய ராஜபக்சவுக்கே உள்ளது’’ என்றார்.

இவையாவும் ஒருபுறமிருக்க, கடந்த பெப்ரவரி மாதம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம்பெற்ற நாளுக்கு அடுத்த நாளன்று அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியிருந்த கோத்தபாய ராஜபக்சவிடம் தாங்கள் பிரதமர் பதவியை ஏற்கப் போகின்றீர்களா? என ஊடகவியலாளர்கள் கேட்ட போது, ‘அதெப்படி முடியும்? நான் அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ள ஒருவரல்லவா?’ என பதில் கேள்வி எழுப்பியிருந்தார் கோத்தபாய.

அந்த வகையில், அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக அறிவிப்பு வௌிவரும் வரையில் இந்த நாட்டு மக்கள் எதிர்வு கூறல்களைக் கணக்கில் எடுக்காது, பொறுமை காத்திருக்க வேண்டியுள்ளது.