இலஞ்சம் கோரிய அதிகாரிகளை சூட்சுமமாக சிக்கவைத்த பிரதமர்?

Report Print Steephen Steephen in அரசியல்
667Shares

இந்திய நிறுவனத்திடம் இலஞ்சம் பெற்றுக்கொண்ட போது கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட ஜனாதிபதியின் பணியாளர்கள் குழுவின் தலைமை அதிகாரி மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோரை சிக்க வைக்கும் திட்டத்திற்கு பிரதமர் செயலகமே இந்திய நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கியதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும், இந்த அதிகாரிகளை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.

கந்தளாய் சீனி நிறுவனத்தை 30 வருட குத்தகைக்கு பெற்று கொள்ள கடந்த 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முன்வைத்த விலை மனு கோரலுக்கு அமைய சீனி நிறுவனத்தின் நிர்வாக உரிமை இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

எனினும் அப்போது காணி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த ஐ.எச்.மஹாநாம, சீனி நிறுவனம் இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டமைக்கு தொடர்ந்தும் எதிர்ப்பை வெளியிட்டு வந்துள்ளார்.

இது சம்பந்தமாக அந்த நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள சர்வதேச தீர்வாயத்திற்கு சென்று உத்தரவொன்றை பெற்றுக் கொண்டுள்ளது. எனினும் மஹாநாம தொடர்ந்தும் இந்திய நிறுவனத்திடம் 540 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக கோரி வந்துள்ளார்.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக கந்தளாய் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த இந்திய நிறுவனத்தின் அதிகாரிகள் இது குறித்து தெரியப்படுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள பிரதமர், விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி மற்றும் காணி அமைச்சருக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறு ஆலோசனை வழங்கியிருந்தார்.

எனினும் இதற்கு ஜனாதிபதியிடம் இருந்தோ ஜனாதிபதி செயலகத்திடம் இருந்தோ பதில் கிடைக்கவில்லை. இதனையடுத்து இரண்டு மாதங்களுக்கு பின்னர், ஜனாதிபதி, மஹாநாம என்ற அதிகாரி தனது பணியாளர்குழுவின் தலைமை அதிகாரியாக நியமித்துள்ளார்.

இதன் பின்னர் அந்த அதிகாரி பெரும் தொகையை இலஞ்சமாக கோரி வந்துள்ளார். இதனையடுத்து இந்திய நிறுவனம் அது குறித்து மீண்டும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

இதற்கு அமைய பிரதமரின் செயலகம், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஊடாக சுற்றிவளைப்புக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய குறித்த அதிகாரி கோரிய 540 மில்லியன் இலஞ்சப் பணத்திற்கான முற்பணமாக கொடுத்த 20 மில்லியன் பணத்தை 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களாக இரண்டு கட்டுகளாக மஹாநாமவிடம் கையளித்துள்ளது.

மஹாநாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோர் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனத்தில் வைத்து பணத்தை எண்ண ஆரம்பிக்கும் போது ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.