அராஜககாரர்களுக்காக புதிய அரசாங்கத்தை அமைக்கவில்லை

Report Print Steephen Steephen in அரசியல்
40Shares

சில அராஜககார்கள் தமது வேலைகளை செய்துக்கொள்வதற்காக நாங்கள் 2014 ஆம் ஆண்டு புதிய அரசாங்கத்தை அமைக்கவில்லை எனவும் இவர்களுடன் தொடர்ந்தும் செல்ல முடியாது எனவும் 2020 ஆம் ஆண்டு புதிய முன்னணியின் ஊடாக புதிய பயணத்தை ஆரம்பிக்க போவதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஜாதிக ஹெல உறுமயவின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கம் நாட்டு மக்களின் பணத்தை தனது விருப்பம் போல் பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தியது. அந்த பணம் எந்தளவுக்கு மீண்டும் முதலீடாக மாறும் என்பதை ஆராயவில்லை.செலவு மட்டுமே செய்யப்பட்டது.

குறிப்பாக அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்க பெருந்தொகை பணத்தை செலவிட்டு நான்கு வழி சாலைகளை அமைத்தனர். அந்த பணத்தை செலவிட்டு எத்தனை சாதாரணமான வீதிகளை நிர்மாணித்திருக்க முடியும். இந்த நெடுஞ்சாலைகள் எந்தளவுக்கு நாட்டுக்கு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை ஆராயவில்லை. பொய்யான கண்காட்சிகளையே நடத்தினர்.

தற்போதும் அப்படிதான் குருணாகலில் இருந்து கலகெதரவுக்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்படுகிறது. கண்டிக்கு ஒரு மணி நேரத்தில் செல்லலாம் என்றுதான் அது நிர்மாணிக்கப்படுகிறது. இவை அனைத்தும் பொய்யான கண்காட்சிகள். மக்களுக்கு பிரயோசனமானவற்றை செய்ய வேண்டுமே தவிர இரண்டு மூன்று பேரின் தேவைகளை நிறைவேற்றக் கூடாது.

நாங்கள் 2015 ஆம் ஆண்டு உயிரை பணயம் வைத்து புதிய அரசாங்கத்தை அமைத்தோம். சில அராஜககாரர்கள் நாட்டு மக்களின் பணத்தை பயன்படுத்தி வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர். நாட்டு மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தையே இவர்கள் தமது வியாபாரத்திற்கு பயன்படுத்தினர்.

இது நாட்டு மக்களுக்காக அபிவிருத்தி பணிகளை செய்வதற்காக இருந்த பணம். இதனால், இப்படியானவர்களுடன் இணைந்து தொடர்ந்தும் செல்ல முடியாது. நாங்கள் 2020 ஆம் ஆண்டில் புதிய முன்னணியை உருவாக்குவோம். அதன் ஊடாக புதிய பயணத்தை ஆரம்பிப்போம். புதிய அரசியல் கலாசாரத்தை நாங்கள் உருவாக்குவோம் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.