எதிர்வரும் 2020ம் ஆண்டு தான் அரசியலில் இருந்து ஓய்வுபெறப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
கிழக்கு மாகாணத்தின் பிராந்தியக் கட்சிகள் மற்றும் தமிழ், முஸ்லிம் ஆதரவாளர்கள் பெருமளவாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
மேதினக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் ஓய்வுபெற போகிறீர்களாக என சிலர் கேட்கின்றனர், சமூக வலைத்தளங்களிலும் அது பதிவேற்றப்படுகின்றது, எனினும் 2020 ஆம் ஆண்டு ஓய்வுபெறுவதற்கு முன்னர் தான் செய்ய வேண்டிய பல வேலைகள் பல இருக்கின்றன.
இலங்கையில் நேர்மையான அரசியல்வாதிகள் எத்தனை பேர் இருக்கின்றனர்?. கொள்ளையடிக்காத அரசியல்வாதிகள் எத்தனை பேர் உள்ளனர்?
சிலர் 2020 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வர கனவு காண்கின்றனர். எனினும் சரியான எந்த வேலைத்திட்டங்களும் இல்லை.
இவர்கள் நாட்டின் வறிய மக்களது உணர்வுகளை புரிந்து கொள்வதில்லை. அரசியல் நாடியை புரிந்துக்கொள்ள வேண்டும். தேவலோகம் குறித்து பலருக்கு பேசவும் கனவு காணவும் முடியும்.
எனினும் வறிய மக்கள் பற்றி அவர்களுக்கு அனுதாபம் இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேசிய ஐக்கியம் நல்லிணக்கம் உள்ள தெளிவான வேலைத்திட்டத்துடன் முன்னோக்கி செல்லும்.
இந்த புதிய வேலைத்திட்டத்திற்கு உதவுமாறு அனைவரிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.