மஹிந்த அணியுடன் சேர்ந்து சபைகளை வென்று விட்டதாக தம்பட்டம் அடிக்கின்றார்கள்: திகாம்பரம்

Report Print Thirumal Thirumal in அரசியல்

உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பின் தமிழ் மக்களை கொன்று குவித்த மஹிந்த அணியுடன் கூட்டு சேர்ந்து சபைகளை வென்றுவிட்டதாக தம்பட்டம் அடிக்கின்றார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தலவாக்கலையில் 07.05.2018 இன்று நடைபெற்ற த.மு.கூட்டணியின் மேதின கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மலையக வரலாற்றில் எத்தனையோ கட்சி தலைவர்கள் மற்றும் கட்சிகள் செயல்பட்ட போதிலும் தமிழ் முற்போக்கு கூட்டணி உருவாகியதன் பின்பே மலையக மக்களுக்கு விமோச்சனம் ஏற்பட்டுள்ளது.

எமது தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று வாழ்க்கை வருமானத்தில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் அவர்களுடைய உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை.

எதிர்வரும் காலத்தில் முறையான ஊதியம் ஒன்றை பெற கம்பனிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு போராடியேனும் சரியான சம்பளத்தை நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுப்போம்.

ஒரு காலத்தில் சாராயம் மற்றும் சோறுக்கு சோரம் போன எமது மக்கள் இன்று அந்த அடிமைத் தனத்திலிருந்து விடுப்பட்டுள்ளனர்

மலையக மக்கள் அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றமடைய வேண்டும். வாழ்க்கை அபிவிருத்தி அடைய வேண்டும் என்பதை நானும், த.மு.கூட்டணியும் ஆசைப்படுகின்றோம்.

எமது மக்கள் வாழ்க்கையில் எழுச்சிப்பெற வேண்டும். ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் மானத்தோடும் மரியாதையோடும் வாழ வேண்டும் என்பதை இலக்காக கொண்டு அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

எமது மக்கள் கோழி குஞ்சுகளுக்கு ஆசைப்பட்டவர்கள் அல்ல. அவர்களுக்கு கோழி குஞ்சுகளை வழங்கி வசைப்படுத்தவும் முடியாது. மாறாக உரிமை அவசியமாக இருக்கின்றது.

இதற்காக கடந்த தேர்தல் காலத்தின் போது ஜனாதிபதியிடம் நாம் கேட்டது. மரியாதையுடனும், மானத்துடனும் வாழக்கூடிய வகையில் தனி வீடுகளை வேண்டும் என்பதை கேட்டு இன்று நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

2020ம் ஆண்டில் 50 ஆயிரம் வீடுகளை கட்டி முடித்து விட்டு நாம் தேர்தலில் வாக்கு கேட்க மக்கள் மத்திக்கு வருவோம் என்பதை உறுதியாக தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.