பொன்சேகாவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குங்கள்! அமைச்சர் துமிந்த திஸாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மிகவும் அநாகரிகமாக பகிரங்கமாக விமர்சித்த அமைச்சர் சரத் பொன்சேகாவை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கோரியுள்ளார்.

மட்டக்களப்பில் இன்று ஜனாதிபதியை சந்தித்த அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் நேற்றிரவு ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் தவிசாளரான அமைச்சர் மலிக் சமரவிக்ரமவை தொலைபேசியில் தொடர்புக்கொண்ட துமிந்த திஸாநாயக்க, சரத் பொன்சேகாவின் கருத்து தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

ஜனாதிபதி சம்பந்தமாக சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கோபத்தில் இருப்பதாக மலிக் சமரவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.

பொன்சேகா வெளியிட்ட கருத்து தொடர்பில் அவரை அலரி மாளிகைக்கு அழைத்து பிரதமர் விசாரித்ததாகவும் எதிர்காலத்தில் இப்படியான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டதாகவும் அமைச்சர் சமரவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.