புதிய அரசியலமைப்பு தொடர்பில் தெளிவான விடயங்களை ஜனாதிபதி கூறவேண்டும்: கி.துரைராஜசிங்கம் வேண்டுகோள்

Report Print Kumar in அரசியல்
37Shares

புதிய அரசியலமைப்பு தொடர்பில் மே தின நிகழ்வில் அல்ல நாடாளுமன்ற அமர்வின்போது தெளிவான விடயங்களை ஜனாதிபதி கூறவேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் கி.துரைராஜசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரைகுறையாக நின்றுபோயுள்ள அரசியலமைப்பின் அடுத்த கட்டம் எவ்வாறு அமையப்போகின்றது என்ற செய்தியை தமிழ் மக்கள் எதிர்பார்த்திருப்பதாகவும், அந்த செய்தியின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்தகட்ட நகர்வும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் எமது ஒற்றுமை மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் எதிர்பார்க்காத சக்தியொன்றினால் நாங்கள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

எங்களுடைய வல்லமையை நாங்கள் எவ்வாறு சேர்த்துக்கொள்ளப் போகின்றோம் என்பது பற்றி இன்னும் கனதியாக சிந்திக்கின்ற ஒரு சந்தர்ப்பமாக இந்நிகழ்வினை ஒரு ஆரம்ப நிகழ்வாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த நாட்டைப் பொறுத்தவரை தொழிலாளர் உரிமை எங்களுடைய இனத்தின் விடுதலையிலே தான் தங்கியிருக்கின்றது.

இந்த நாட்டிலிருக்கின்ற சிங்கள தொழிலாளியையும், தமிழ் தொழிலாளியையும் ஒன்றுசேரவைத்து கௌரவிக்கின்ற ஒரேயொரு இடமாக மேதின மேடைகள் தான் இருக்கின்றதே தவிர நடைமுறையில் அவை இல்லை.

அதனடிப்படையில் தான் நம் தேசியம் சார்ந்த தான தொழிற் சங்கங்கள் இருந்திட வேண்டும் என்கின்றனர். நிலைமையினை நாங்கள் கடைப்பிடித்திருந்தோம். ஆனால் காலப்போக்கில் அவை கலைந்துவிட்டன.

அனைத்து தொழிற்துறைகளிலும் தமிழர்கள் தங்களுக்கென தொழிற்சங்கங்களை வைத்திருந்த காலங்கள் உண்டு. தற்போது தேசிய தொழிற் சங்கங்களோடும், தேசிய கட்சிகளோடும் எங்களது தொழிற்சங்கங்கள் கரைந்துவிட்ட நிலையினை காண்கின்றோம்.

தமிழ் மக்களுக்கான 38 போராளிக்குழுக்கள் ஆயுதம் ஏந்தி இந்த சின்ன இனத்திற்காக போராடிய விடயத்தினை நாங்கள் கவலையுடன் நிகழ்வினை நாங்கள் பின்நோக்கி பார்க்கவேண்டியுள்ளது.

நாங்கள் யாருக்கு எதிராக எந்த இராணுவத்திற்காக ஆயுதங்களை தூக்கினோமோ அந்த ஆயுதங்கள் அவ்வாறு தூக்கப்பட்டவர்களை விட அதனை தூக்கியவர்களையும் அதை பிரதிநிதித்துவப்படுத்தும் நம்மையும் கொன்றுவிட்ட துன்பியலை நாங்கள் நினைக்கும் போது இரத்தக் கண்ணீர் வருகின்றது.

இவ்வாறுதான் இந்த நாட்டில் கழுதை தேய்ந்து கட்டெறும்பாக இருக்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் சிறுபான்மையினர் அல்ல. சிறுபான்மையினராக ஆகியிருக்கின்றோம். சிறுபான்மையினராக ஆக்கியவர்கள் நாங்கள் தான்.

கடந்த காலத்தில் நான்கு வருடமாக கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்து மேற்கொண்ட சேவையினை நாங்கள் இரண்டரை வருடங்களாக விவசாய அமைச்சராக இருந்து ஆற்றிய சேவையினை சிலர் ஒப்பிடுகின்றனர்.

ஒரு விவசாய அமைச்சினைக்கொண்டு 12கோடி ரூபாவில் விவசாய ஆராய்ச்சி நிலையத்தினை உருவாக்கியுள்ளோம்.

மேலும், நான்கு வருட முதலமைச்சர் காலத்தினை எங்களது இரண்டரை வருடகாலத்துடன் ஒப்பிட்டுத்தான் பார்க்கவேண்டுமே தவிர இரண்டு ஆட்சிமுறையினையும் சமனாக ஒப்பிட்டுபார்க்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.