சுமந்திரனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: நாடாளுமன்ற உறுப்புரிமையை பறிக்குமாறு கோரிக்கை

Report Print Murali Murali in அரசியல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனது நாடாளுமன்ற உறுப்புரிமையை பறிக்க வேண்டும் என கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“வடக்கு, கிழக்கு பகுதிகளில் விகாரை அமைப்பதை தடை செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்தார்.”

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர், “ நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கருத்து தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தமது நிலைப்பாட்டை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

சுமந்திரனின் இந்த அறிவிப்பு, அரசியல் யாப்புக்கு முரணானது. அத்துடன், முறைகேடான ஒன்றாகவும் உள்ளது. இதனூடாக மத பேதம் ஏற்படுவதற்கு வழிவகுக்கப்படுகின்றது.

இவ்வாறு கருத்து வெளியிட்ட சுமந்திரனின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட வேண்டும். அத்துடன், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு பௌத்த விகாரைகள் அமைப்பது மட்டுமா பிரச்சினைக்குரியது, வேறு வழிபாட்டு தலங்களை அமைப்பது அவருக்கு பிரச்சினையில்லையா?

எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து உண்மையிலேயே கொடூரமான ஒன்று” எனவும் கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.