அரசியல் தெரியாத இலங்கைத் தமிழரசுக்கட்சியின் செயலாளர்

Report Print Navoj in அரசியல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளருக்கு அரசியலும் தெரியாது, நிர்வாகமும் தெரியாது என ஆரையம்பதி பிரதேச சபையின் தவிசாளர் கே.மகேந்திரலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மே தின நிகழ்வு வாழைச்சேனை கருணைபுரம் குழந்தை யேசு மைதானத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைராசசிங்கம் கிழக்கு மாகாண விவசாய அமைச்சராக பதவி வகித்த காலத்தில் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களுக்கு என்ன சேவை செய்தார் என்பதை என்னால் காண முடியும்.

தனது கிராமத்தவர்களை மாத்திரம் அலுவலகத்தில் வேலைக்கு அமர்த்தினாரே தவிர மக்கள் மற்றும் தொழிலாளர்களை பற்றியே எந்த சிந்தனையும் அற்றவராகவே தனது பதவிக் காலத்தினை நிறைவு செய்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை பண்ணைகளை உருவாக்கி இருக்கலாம், மீனவர்களுக்கு வாவிகள், குளங்களில் மீனை வளர்ப்பதற்கு ஏற்ற வழிகளை செய்திருக்கலாம். இவற்றை செய்வதற்கு ஆலோசனை கூறினேன். அவை கருத்தில் கொள்ளப்படவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தினோடு கொண்டிருக்கும் உறவினைப் பயன்படுத்தி தனது விவசாய அமைச்சினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தினை வளம் செழிக்கக் கூடிய வகையில் பண்ணைகளை உருவாக்கி பலருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கி செயற்படக் கூடிய அமைச்சாக இருந்தது.

ஆனால் அவருக்கு அரசியலும் தெரியாது, நிர்வாகமும் தெரியாது, மக்கள் மனநிலை புரியாது, என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு சிறந்த கவிஞர், அரசியல் துறையை விட்டு எழுத்தாளராக, கவிஞராக மாற்றிக் கொண்டாராக இருந்தால் அது அவருக்கும், மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கும் நன்மையளிப்பதாக இருக்கும்.

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அகற்றப்படக் கூடிய வகையில் உங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.