தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் மீண்டும் இணைந்த வெள்ளிமலை

Report Print Rusath in அரசியல்

தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் தான் மீண்டும் இணைந்துள்ளதாக ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை தெரிவித்துள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வெள்ளிமலை என அழைக்கப்படும், ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தமிழர் விடுதலைக் கூட்டணி பங்காளிக் கட்சியாக இருந்த காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் வீட்டுச் சின்னத்தில் கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த அவர், கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் முடிவுறும் தறுவாயில் அவர் அங்கம் வகித்த தமிழர்விடுதலைக் கூட்டணிக் கட்சியிலிருந்து விலகியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அவர் தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து விலகி தமிழரசுக் கட்சியில் இணைவதற்கான விண்ணப்பத்தை வழங்கியிருந்ததாகவும், அதனை தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் இதனால் தான் எந்தக் கட்சியிலும் இல்லாமல் தனித்து விடப்பட்டிருந்ததாக கிருஷ்ணபிள்ளை பல முறை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்துள்ளதாகவும், எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கிழக்கில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்து கிராமங்கள் தோறும் அவரது ஆதரவாளர்களைச் சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இவ்விடயம் குறித்து அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

நான் மீண்டும் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கொண்டுள்ளேன். எதிர்வரும் தேர்தல்களில் இக்கட்சியின் சார்பில்தான் போட்டியிடுவேன். எனக்கென்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் மக்கள் செல்வாக்கு உள்ளது.

எனவே தொடர்ந்தும் நான் தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பிலிருந்து தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருப்பேன்” என தெரிவித்தார்.