அரசாங்கத்திற்கு எதிரானவர்களை சிறையில் அடைக்க முயற்சி - மஹிந்த ராஜபக்ச

Report Print Kamel Kamel in அரசியல்

அரசாங்கத்திற்கு எதிரானவர்களை சிறையில் அடைக்கும் நோக்கில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், “விசேட நீதிமன்றங்களை அமைக்கும் சட்டத் திருத்தமானது, தெளிவாக அரசாங்கத்திற்கு எதிரானவர்களை வேட்டையாடும் நோக்கிலானது.

அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் அரசியல் பிரமுகர்களின் வாயை அடைத்து அவர்களை வேட்டையாடும் நோக்கிலானது இந்த சட்டமாகும். அரசியல் கலாச்சாரத்தை தூய்மைப்படுத்தும் நோக்கில் இந்த சட்டம் உருவாக்கப்படவில்லை.

இந்த புதிய சட்டத்தின் ஊடாக பிரதம நீதியரசரின் அதிகாரங்களை அரசியல்வாதிகள் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர். விசேட நீதிமன்றங்களை அமைக்கும் அதிகாரம் பிரதம நீதியரசருக்கே காணப்படுகின்றது.

இந்த அதிகாத்தை அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைக்கும் நோக்கில் புதிய சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீதிமன்றங்களை அரசியல் மயப்படுத்தும் முயற்சிகளாகவே இந்த விடயங்களை நோக்க வேண்டும்.

கள்வர்களை பிடிப்பதற்காக இந்த சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக அரசியல்வாதிகளை சிறையில் அடைக்கும் நோக்கில் சட்டம் உருவாக்கப்படுவதாக மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.