ரணிலின் யோசனைக்கு மைத்திரி போர்க்கொடி : அரசியல் களத்தில் மீண்டும் சர்ச்சை

Report Print Rakesh in அரசியல்

சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சமுர்த்திக் கட்டமைப்பில் மறுசீரமைப்பு அவசியமாகின்ற போதிலும், அதை மத்திய வங்கியின் கீழ் கொண்டுவருவதற்கு அவசியமில்லை என்று ஜனாதிபதி கூறியுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் கடந்த 6ஆம் திகதி கொழும்பு, சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சமுர்த்தி வங்கி விரைவில் மத்திய வங்கியின் கீழ் கொண்டுவரப்படும் என்று தெரிவித்திருந்தார்.

"சமுர்த்தி வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் மத்திய வங்கியால் கண்காணிக்கப்படும். ஊழியர் சேமலாப நிதியமும் நிதியமைச்சால் கண்காணிக்கப்படுகின்றது. எனினும், சமுர்த்தி வங்கி எந்தவொரு நிறுவனத்தாலும் கண்காணிக்கப்படவோ, நிர்வகிக்கப்படவோ இல்லை.

எனவே, விரைவில் அது மத்திய வங்கியில் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்படும்'' என்றும் பிரதமர் கூறியிருந்தார்.

பிரதமரின் இந்த யோசனைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, முன்னாள் சமுர்த்தி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோர் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

"நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சமுர்த்தி சட்டத்தின் கீழேயே சமுர்த்தி வங்கி செயற்படுகின்றது. இது 200 பில்லியன் ரூபாவுக்கு அதிகமான மூலதனத்தைக் கொண்டுள்ளது.

இதனை மத்திய வங்கியின்கீழ் கொண்டுவர முடியாது. சமுர்த்தி சட்டத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் திருத்தினால் மாத்திரமே அதனைச் செய்யமுடியும்.

நிச்சயமாக அதற்கான பெரும்பான்மையைப் பிரதமரால் பெறமுடியாது. மத்திய வங்கியில் பகல் கொள்ளை நடந்திருக்கின்றது. சாதாரண மக்களின் பணத்தை பிரதமரின் கைகளுக்கு விட்டுக்கொடுக்க முடியாது.

ஏனைய நாடுகளிலும் வறிய மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட இதுபோன்ற வங்கிகள், அந்தந்த நாடுகளின் மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்படுவதில்லை'' என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பிரதமரின் யோசனைக்கு சு.கவின் தலைவரான ஜனாதிபதியும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். எனவே, தமது திட்டத்தைப் பிரதமர் கைவிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, நாடெங்கும் சமுர்த்தி வங்கிக்கு 1,754 கிளைகள் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.