மலையகத்தில் மோதலுக்கு தயாராகும் அரசியல் தலைவர்கள்!

Report Print Rakesh in அரசியல்

"மலையக மக்களுக்காக எந்தவொரு விவாதத்திலும் பங்கேற்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். சவால்களை ஏற்றுத்தான் பழக்கம். மாறாக ஓடிஒளிய மாட்டோம்'' என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

நுவரெலியாவில் கடந்த 7ஆம் திகதி நடைபெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்திலும், பேரணியிலும் "தில் இருந்தால் மோதிப் பாரு'' என்ற கோஷம் ஓங்கி ஒலித்தது. ரிசேட்டுகளிலும் இந்த வசனமே பொறிக்கப்பட்டிருந்தது.

இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி. கூட தனது உரையின் இறுதியில், "தில் இருந்தால் மோதிப் பாரு; மூக்கை உடைச்சுக் காட்டுறேன்'' என்று வீர முழக்கமிட்டிருந்தார்.

இதையடுத்து இவ்விவகாரம் சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீயாகப் பரவியதுடன், பலகோணங்களிலும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்துக்கும், அச்சங்கம் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்குமே இ.தொ.கா. இந்தச் சவாலை விடுத்தது எனவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், 'தில் இருந்தால் மோதிப் பாரு' விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த திலகர் எம்.பி., "எமக்குத் தில் இருக்கின்றது. மலையகம் தொடர்பில் நாடாளுமன்றத்திலோ அல்லது தொலைக்காட்சியிலோ பகிரங்க விவாதத்துக்கு வருவதற்குரிய தில் இருக்கின்றதா? அவ்வாறு இருக்குமானால் தொண்டமான் விவாதத்துக்கு வரவேண்டும்'' என்று சவால் விடுத்திருந்தார்.

இந்தச் சவால் தொடர்பில் இ.தொ.காவின் நிலைப்பாட்டை வினவியபோது கருத்து வெளியிட்ட கணபதி கனகராஜ்,

"இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மீது இன்று சிலருக்குப் பொறாமை. எமது கூட்டங்களுக்கு மக்கள் அணிதிரண்டு வருவதால் தொழிலாளர் தேசிய சங்கத்தவர்கள் வன்முறை அரசியலில் ஈடுபடுகின்றனர். இது ஜனநாயக வழிமுறை அல்ல. அத்துடன், இ.தொ.கா. மீது போலிக் குற்றச்சாட்டுகளையும் சுமத்தி வருகின்றனர்.

மலையக மக்களின் ஆதரவு எமக்கே இருக்கின்றது. எனவே, விவாதம் நடத்துவதற்கு நாம் அஞ்சமாட்டோம். தொண்டமான் அனுபவம் வாய்ந்த தொழிற்சங்க அரசியல்வாதி. அவருடன் விவாதத்தில் ஈடுபடுவதற்குத் தகுதி வேண்டும். அதற்குப் பொருத்தமானவர் நீங்கள் கூறிய நபர் அல்லர். வேண்டுமானால் இரண்டாம் தலைவர்களான நாம் தயாராக இருக்கின்றோம்.

மக்களுக்காக எந்த இடத்தில் எப்படிப் பேசவேண்டுமோ அதை இ.தொ.கா. செய்து வருகின்றது'' - என்றார்.