வருடத்தின் முதல் 3 மாதங்களில் வடமாகாணத்தில் 951 விபத்துக்கள்

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

போக்குவரத்து சட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டிய பொலிஸார் தமது மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருக்கும் பெட்டியை திறந்துவைத்துக் கொண்டு இலஞ்சம் வாங்குகிறார்கள்.

மக்கள் மத்தியிலும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வில்லை என வடமாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் வடமாகாணத்தில் 951 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டிள்ளார்.

வடமாகாணத்தில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்ககோரி வடமாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா வடமாகாணசபையின் 122வது அமர்வில் இன்று பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

குறித்த பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

வீதியில் உள்ள தொடர் கோட்டில் வாகனங்களை முந்தி செல்ல இயலாது. வாகனங்களை நிறுத்த இயலாது. ஆனால் அந்த தொடர்கோடு உள்ள இடங்களில் நின்று வாகனங்களை மறிக்கும் பொலிஸார் தமது மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ள பெட்டியை திறந்துவைத்துக் கொண்டு இலஞ்சம் வாங்குகிறார்கள்.

இந்த நிலையில், மக்களுக்கும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து போதியளவு விழிப்புணர்வு இல்லை. இதனாலேயே விபத்துக்கள் அதிகரிக்கின்றன.

மாகாணசபை உறுப்பினர் த. குருகுலராஜா கூறியதைபோல் இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் மட்டும் 951 விபத்துக்கள் நடந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த வட மாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா,

கடந்த 2017ம் ஆண்டில் சுமார் 1500இற்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளன. அவற்றில் 68 பேர் மரணமடைந்துள்ளார்கள், 315 பேர் தலையில் பலத்த காயமடைந்துள்ளார்கள்.

2018ம் ஆண்டில் முதல் 3 மாதங்களில் 951 பேர் விபத் தக்களில் சிக்கியுள்ளார்கள். அவர்களில் 16பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்த தரவுகள் இலங்கையில் உள்ள மற்றய மாகாணங்களை விடவும் அதிகமாகும்.

எனவே இவ்வாறான வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக முதலமைச்சர் பொருத்தமான நடவடிக்கையில் இறங்கவேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்ந்தும் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறுகையில்,

வீதி விபத்துக்களை தடுக்க தனியே விழிப்புணர்வூட்டல் மட்டும் போதாது. கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியது அவசியம். வீதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் போக்கு வரத்து சமிக்ஞை விளக்குகள் சரியாக ஒளிர்வதில்லை.

நடைபாதையில் கடைகள் போடப்படுகின்றது. இவையும் விபத்துக்களுக்கு காரணமாகின்றது. முதலமைச்சர் சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் என்றவகையில் இவ்வாறான விபத்துக்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.