ஐந்து மாதத்தில் ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிப்பு!

Report Print Kumar in அரசியல்

கடந்த ஐந்து மாதகாலத்தில் ஆயிரம் ஏக்கர் காணிகளுக்கு மேல் விடுவிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, இந்துக்கலாசார அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஸ் தெரிவித்தார்.

வடகிழக்கில் இராணுவ தலைமையகங்கள் உள்ள காணிகள் உட்பட 530 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முக்கிய இடங்களில் உள்ள இராணுவ முகாம்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்வதும் தனியார் காணிகளை உரியவர்களிடம் கையளிப்பது தொடர்பிலான விசேட உயர் மட்டக்கூட்டம் இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, இந்துக்கலாசார அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதியமைச்சர் அலிசாகீர் மெலாளானா, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், ஞா.சிறிநேசன், மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், கிழக்கு இராணுவ கட்டளைத்தளபதி, கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது படைமுகாம்கள் உள்ள பொதுமக்களின் காணிகள் மற்றும் அரச தனியார் நிறுவனங்களுக்குரிய காணிகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அவற்றினை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கான இடதேர்வு குறித்தும் ஆராயப்பட்டது.

பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் இராணுவ இடங்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டதுடன் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது.