வவுனியா சிறைச்சாலையில் சிவசக்தி ஆனந்தன் எம்.பி

Report Print Thileepan Thileepan in அரசியல்

வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் எம்.தியகராஜா ஆகியோர் நேரடியாக சென்று இன்று சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தனர்.

வவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்கு எதிராக பல்வேறு அநீதிகள் இடம்பெறுவதாக அண்மையில் கைதி ஒருவர் வவுனியா நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனையடுத்து கைதிகளுக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளை கண்டித்தும் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் பாவனை நடைபெறுவதாகவும் கூறி சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து சில கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலையில் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் சிறைக்கைதிகள் நேற்றைய தினம் உணவுதவிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

இவ்விடயங்கள் தொடர்பாக ஆராயும் பொருட்டு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் எம்.தியாகராஜாவும் விளக்கமறியல் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர்.

இதன்போது கைதிகளுடனும் சிறைச்சாலை அதிகாரிகளுடனும் கலந்துரையாடியதுடன், வவுனியா சிறைச்சாலைக்குள் போதைபொருள் பாவனையுள்ளதாக கைதிகள் தெரிவித்தாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இதேவேளை வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் 55 கைதிகளை மாத்திரமே தங்க வைக்க முடியும். இந்த நிலையில் சுமார் 258 பேரை தங்க வைக்கின்ற நிலைமை காரணமாக இட வசதியின்மை ஏற்பட்டமையால் சிறைக்கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதும் அது நிறுத்தப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்திருந்ததாக தெரிவித்தார்.