அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது குறித்து சுதந்திரக் கட்சி இன்று தீர்மானிக்குமா?

Report Print Kamel Kamel in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது குறித்து இன்றைய தினம் தீர்மானிக்குமா என்பது சந்தேகமே என தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

இன்று நடைபெறும் மத்திய செயற்குழு கூட்டம் தீர்மானம் மிக்கது எனவும், அரசாங்கத்தில் நீடிப்பதா அல்லது அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அண்மையில் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இது பற்றி கூறியிருந்தார்.

எனினும், இந்த விடயம் பற்றி எஸ்.பி. திஸாநாயக்கவிடம் கேள்வி எழுப்பிய போது, அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது குறித்து இன்று பேசப்படாது என தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது குறித்த யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும் இன்றைய மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது பற்றி பேசப்படுவது சந்தேகமே என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் என முன்னாள் அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் நீடிப்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி முன்னதாக கூறியதாகவும், சுதந்திரக் கட்சியின் கொள்கைகளுடன் அரசாங்கத்தில் நீடிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது குறித்த யோசனை இன்றைய மத்திய செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிக் கொள்ள உத்தேசித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்ள தமக்கோ சுதந்திரக் கட்சிக்கோ எவ்வித தேவையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.