மகிந்தானந்த மீது குற்றம் சுமத்த கால அவகாசம்

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக குற்றச்சாட்டு பத்திரத்தை தாக்கல் செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி வரை கால அவகாசத்தை வழங்கியுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்திற்கு கரம் பலகை மற்றும் செஸ் பலகை கொள்வனவு செய்தன் மூலம் அரசுக்கு 5 கோடி ரூபா இழப்பை ஏற்படுத்தியதாக மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு இந்த வழக்கை தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது சந்தேக நபரான மகிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

வழக்கின் இரண்டாவது சந்தேக நபரான சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்னாண்டோவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாக்குமூலத்தை ஆராய்ந்து குற்றச்சாட்டு பத்திரத்தை தாக்கல் செய்ய கால அவகாசத்தை வழங்குமாறு சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.

கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திஸாநாயக்க கால அவகாசத்தை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.