விஜயகாந்த் மீதான மனு விசாரணையை ஒத்தி வைத்தது யாழ்.நீதிமன்றம்

Report Print Sumi in அரசியல்

யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினரும் தண்டனைக் கைதியுமான சுந்தர்சிங் விஜயகாந்த்துக்கு மேன்முறையீட்டு மனு நிலுவையின் போதான பிணை கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு வரும் 30ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த சீராய்வு மனு நேற்று (16) விசாரணைக்கு வந்த போது பிரதிவாதிகளுக்கு அறிவித்த அனுப்ப உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, விசாரணையை வரும் 30ஆம் திகதிவரை ஒத்திவைத்தார்.

திருட்டு நகைகளை வங்கியில் அடகு வைக்க முற்பட்ட குற்றத்துக்காக, யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில் உறுப்பினராகத் தெரிவாகியவரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளருமான சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட இருவருக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

அத்துடன், அதே குற்றத்துக்கு மேலும் ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கடந்த மார்ச் 8ஆம் திகதி தீர்ப்பளித்தது.

குற்றவாளிகள் மூவரும் தலா 7 லட்சம் ரூபா இழப்பீட்டை நகையின் உரிமையாளருக்கு வழங்கவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்று யாழ்ப்பாணம் நீதிவான் சி.சதீஸ்தரன் தீர்ப்பளித்திருந்தார்.

கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் திகதியன்று வங்கியொன்றில் அடகு வைப்பதற்கு சுதர்சிங் விஜயகாந்த் சென்றிருந்தார். அந்த வங்கியில் கடமையாற்றும் அலுவலகரின் திருட்டுப் போன நகைகள் சுதர்சிங் விஜயகாந்திடம் காணப்பட்டன. அதுதொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார், விஜயகாந்த் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனர்.

விஜயகாந்த் உள்ளிட்ட நான்கு பேரும் மீது 116 பவுண் நகைகளைத் திருடியமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கோப்பாய் பொலிஸார் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கிலேயே சுந்தர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட மூவருக்கு இந்த தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் தலைவரான விஜயகாந்த், தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து அதன் உதயசூரியன் சின்னத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார்.

யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினராக யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் இருந்து சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

எனினும் மாநகர சபையின் முதலிரண்டு அமர்வுகளின் அவர் பங்கேற்கவில்லை. அதற்கான அனுமதியை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு வழங்கவில்லை.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சுந்தர்சிங் விஜயகாந்த் சார்பில் அவரது சட்டத்தரணி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவுக்கு அமைய மேன்முறையீட்டின் போதான பிணை விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சுந்தர்சிங் விஜயகாந்தின் துணைவியார் முன்வைத்தார்.

எனினும் அந்த பிணை விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று நிராகரித்தது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் நிராகரித்த விண்ணப்பம் தொடர்பில் சீராய்வு செய்யக் கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சீராய்வு மனுவை விஜயகாந்தின் துணைவியார் தாக்கல் செய்துள்ளார்.