நடந்த பிழைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தமுடியாது: சத்தியலிங்கம்

Report Print Thileepan Thileepan in அரசியல்

எமக்கு நடந்த பிழைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது என வட மாகாணசபை உறுப்பினர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வருடாந்த குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து வாழ்வாதார உதவிகளை வவுனியா கால்நடை அபிவிருத்தி திணைக்களத்தில் வைத்து பயனாளிகளுக்கு வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

எங்களுடைய மக்கள் நீண்ட கால போரில் பலவற்றை இழந்ததுடன் இறுதி யுத்தத்தில் பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்டதுடன் எங்களது சொத்துக்களும் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில்தான் எமது மாகாணசபை இவ்வாறான வாழ்வாதார உதவிகள் போன்ற வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றது. கடந்த நாட்களில் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு முள்ளிவாய்க்கால் பகுதியிலே இடம்பெற்றது.

இந்நிகழ்விற்காக வடக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களில் இருந்து இறுதி யுத்தத்திலே இறந்த தமது உறவுகளிற்கு இறுதிக்கிரியைகள் செய்ய முடியாதவர்கள் பலர் அங்கு வந்திருந்ததோடு, இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இப்போதும் உயிருடன் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையில் இருப்பவர்கள் கூட அங்கு வந்திருந்தார்கள்.

இழக்கமுடியாத தமது உறவுகளை இழந்த குடும்பங்கள் அங்கே படுகொலை செய்யப்பட்ட மக்களை முள்ளிவாய்க்காலிலே நினைவு கூர்ந்திருந்தனர். இந்த நிகழ்வை கூட கீழ்மைப்படுத்தும் வகையில் தென்பகுதியில் இருந்து பல குரல்களை கேட்கக்கூடியதாக இருக்கின்றது.

அமைச்சர் ராஜிதசேனாநாயக்க இறுதி யுத்தத்திலே பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதுடன் இம்மக்கள் கொல்லப்பட்ட பிரதேசமாக முள்ளிவாய்க்கால் காணப்படுவதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களிற்கு தமது குடும்ப உறவுகளை இழந்த மக்களிற்கு இப்படியான நினைவேந்தல் நிகழ்வை செய்வதற்கான பூரண உரித்துள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான தென்பகுதியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் இந்த உண்மை நிலையை ஏற்று செயற்பாட்டால்தான் இந்த நாட்டிலே ஒரு நல்லினக்கம் ஏற்படும். ஆனால் தென்பகுதியை சேர்ந்த சில அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றமையையே ஏற்க மறுப்பதானது இந்நாட்டிலும் நல்லிணக்கத்தை ஏற்டுத்த குந்தகமாக இருக்கும்.

கடந்த இரு நாட்களிற்கு முன்பு நடைபெற்ற திறப்ப விழா வைபவம் ஒன்றிற்கு வருகை தந்த மத்திய அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் வடமாகாணத்திலே முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்த நிகழ்வானது தென்பகுதியிலே ஒரு கொதிப்பு நிலையை ஏற்படுத்தியதாக ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.

இறுதி யுத்தத்திலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு ஆதாரம் இருப்பதோடு உலகம் அறிந்த விடயம். நாங்கள் அந்த விடயங்களையும் நடந்த பிழைகளையும் ஏற்றுக்கொள்ளாவிட்டால் நாங்கள் இந்த நாட்டிலே நல்லிணக்கத்தை கொண்டு வருவது என்பது எட்டாக்கனியாகவே இருக்கும்.

இனியாவது இறுதி யுத்தத்தில் மனித குலத்திற்கு எதிராக நடந்த விடங்களையும் பிழைகளையும் ஏற்றுக்கொண்டு அதனை சரி செய்வதற்கான முன்மாதிரியான விடயங்களை அமைச்சர்களாக இருக்கின்றவர்களும் அரசியல்வாதிகளாக இருக்கின்றவர்களும் எடுத்துச்செல்லவேண்டும்.

அங்கு பொதுமக்களே கொல்லப்படவில்லை என்றோ அல்லது கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவுகூறுவதற்கு எங்களுக்கு உரித்து இல்லை என்று சொல்லும் அரசாங்கமாக இருந்தால் எங்களது நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான எந்தவொரு சந்தர்ப்பமும் ஏற்படாது என்ற மனவருத்தமான செய்தியையும் இந்த இடத்தில் பதிவு செய்கின்றேன்.