இலங்கையின் கடன் நெருக்கடி மேலும் அதிகரிக்கும் - நிதி அமைச்சர் எச்சரிக்கை

Report Print Murali Murali in அரசியல்

அடுத்த ஆண்டு இலங்கையின் கடன் நெருக்கடி மேலும் மோசமடையும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“இந்த ஆண்டில் இலங்கை செலுத்த வேண்டிய கடன் 2,845 மில்லியன் டொலர் ஆகும். இதில், 1,789 மில்லியன் டொலர், 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட கடன்களாகும்.

2015ம் ஆண்டுக்குப் பின்னர் பெறப்பட்டு இந்த ஆண்டில் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தவணைக் கொடுப்பனவு, 1,056 மில்லியன் டொலர் மட்டுமேயாகும்.

இந்த ஆண்டில் செலுத்த வேண்டிய கடன்களுக்கான கொடுப்பனவில், 63 சதவீதம், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட கடன்களுக்குரியவையே. 2017ம் ஆண்டில் இது 75 வீதமாக இருந்தது.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட கடன்களால், 2019ம் ஆண்டில், 4.2 பில்லியன் டொலரை சஅரசாங்கம் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது.

இது தற்போதைய அரசாங்கத்தைப் பெரும் கடன் நெருக்கடிக்குள் தள்ளும். அடுத்த ஆண்டு நெருக்கடி மேலும் மோசமடையும்.

அடுத்த ஆண்டு திருப்பிச் செலுத்த வேண்டிய 4,285 மில்லியன் டொலர் கடன் தொகையில், 77 வீதம் அல்லது, 3,315 மில்லியன் டொலர், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட கடன்களாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.