கூட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ள பெரும் சந்தேகம்

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

பயனுள்ளதும், தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு வருவதற்கு தென்னிலங்கை இன வாதிகள் இடமளிப்பார்களா? என தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சந்தேகம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கான உருவாக்க பணிகள் குறித்து மாவை சேனாதிராஜாவிடம் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,

புதிய அரசியலமைப்புக்கான வழிகாட்டல் குழுவில் சிறீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்துள்ளதாக அறிய முடிகிறது. எமது கட்சி சார்பில் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உள்ளனர்.

நேற்று கூட்டம் நடைபெற்றது. ஆயினும் காலநிலை சீரின்மையால் நான் யாழ்ப்பாணம் திரும்ப வேண்டியிருந்ததால் நேற்றைய கூட்டம் தொடர்பாக அறிய முடியவில்லை.

ஆனால் அண்மைய செய்திகளை அவதானிக்கும் போது பெரும்பான்மையான ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு விரைவில் நாடாளுமன்றுக்கு கொண்டு வரப்படும் என நாங்கள் நம்புகிறோம்.

ஆனாலும் தமிழ் மக்களுக்கு பயனுள்ள வகையில் அல்லது தமிழ் மக்கள் விரும்பும் வகையிலான தீர்வு ஒன்று வருவதற்கு தென்னிலங்கையில் உள்ள இனவாதிகள் அல்லது எதிரணியில் உள்ளவர்கள் எந்தளவுக்கு இடமளிப்பார்கள்? என்பதில் எமக்கு பாரிய சந்தேகம் அல்லது அச்சம் உள்ளது.

ஆகவே பொறுத்திருந்தே சில விடயங்களை பார்க்க வேண்டியுள்ளது என மாவை சேனாதிராஜா மேலும் கூறினார்.