மைத்திரியை 2ஆவது முறையும் ஜனாதிபதியாக்குவதே இலக்கு : துமிந்த சபதம்

Report Print Rakesh in அரசியல்

2020இல் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் அரியணையேறவேண்டும் என்பதே எமது இலக்காகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இடைக்கால நிர்வாகக்குழுவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸவும், தேசிய அமைப்பாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவும் நேற்று கட்சி தலைமையகத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றனர்.

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே துமிந்த திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

உட்கட்சி மோதல் வலுத்ததால் இரண்டு, மூன்றாகப் பிரிந்து மோதிக்கொண்டு சுதந்திரக் கட்சி அழிந்துவிடும் என்றே சிலர் வழி மீது விழிவைத்துக் காத்திருந்தனர்.

ஆனால், சுதந்திரக் கட்சி அவ்வாறான கட்சியல்ல என்பதை நிரூபித்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

இவ்வருடம் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெறுவதும், 2020இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் வெற்றிவாகை சூடவைப்பதும், பொதுத் தேர்தலில் வெற்றிநடை போடுவதுமே எமது பிரதான நோக்கங்களாகும் எனவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers