சிறிய பிரச்சினைகளுக்காக ஆர்ப்பாட்டத்தில் இறங்குவது ஆரோக்கியமானதல்ல

Report Print Navoj in அரசியல்

எந்தவொரு சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் மாவட்ட செயலகத்தை குறை கூறிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் இறங்குவது ஆரோக்கியமான போக்கு அல்ல என மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

வந்தாறுமூலை கமநல சேவை பிரிவுக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு பாசனச் செய்கையின் போது செய்கை பண்ணப்பட்ட வேளாண்மைக்கான மானிய மேலதிக உர விநியோகம் வந்தாறுமூலை கமநல சேவை நிலையத்தில் இன்று இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர்,

இம்முறை ஆகக் கூடுதலான உரம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்று அவை விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. 6940.15 மெற்றிக் தொன் தேவையாக இருந்தது. அது கிடைத்து விட்டது. அதேநேரம் மேலதிகமாக செய்கை பண்ணப்பட்ட வயல்களுக்கு உரம் தேவையாக இருந்தது. அந்த உரமும் இப்பொழுது கிடைக்கப் பெற்றுள்ளது.

புலுட்டுமானோடை, அடச்ச கல்குளம், அகத்தியர் குளம் போன்ற 3 குளங்கள் புனரமைப்புச் செய்துள்ள படியால் சராசரியாக 3000 ஹெக்ரேயர் நெற் செய்கை மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விடயம் தேசிய உரச் செயலகத்திற்கு தெரிந்திருக்கவில்லை.

அந்த மேலதிக தேவைகளை அவர்களுக்கு தெரியப்படுத்தி உங்கள் கரம் உரம் கிடைக்க வழி வகை செய்துள்ளோம். அதனையே இப்பொழுது நீங்கள் பெற்று வருகின்றீர்கள். இந்த மாவட்டத்திற்கு உரத் தேவைகளுக்காக அரசாங்கம் செலவிட்ட மொத்தத் தொகை 478 மில்லியன் ரூபாயாகும்.

கடந்த கால நிலைமை தற்போதைக்கு இல்லை. ஆனால் சில குறைபாடுகள் இருக்கலாம் அதனை உரிய முறையில் அணுக வேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.