தமிழர்களின் தேவையை ஜனாதிபதி கண்டு கொள்வதாகத் தெரியவில்லை!

Report Print Samy in அரசியல்

இனப் பிரச்சினைக்கு நடப்பு ஆண்டுக்குள் தீர்வு கிடைக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்திக் கூறியுள்ளமை தற்போதைய காலகட்டத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கொழும்பு அரசு மற்றும் இந்தியா உள்ளிட்ட பன்னாட்டுச் சமூகத்திடம் கூட்டமைப்பு இந்தக் கோரிக்கையை வலியுறுத்திக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கூட்டரசிடம் தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை முற்றாகவே இழக்கப்பட்ட நிலையில், தமிழ் மக்களது ஏகப் பிரதிநிதிகளாகக் கருதப்படும் கூட்டமைப்பு இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக கூட்டு அரசிடம் வலியுறுத்திக் கூறியுள்ளது.

தமிழ் மக்கள் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதிலும், கூட்டரசு அமைக்கப்படுவதிலும் தாராளமாகவே சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உதவியிருக்கின்றனர்.

ஆனால் ஜனாதிபதியோ தமிழர்களைக் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. இதனால் அரசுக்கு ஆதரவு தெரிவிக்கின்ற விடயத்தில் கூட்டமைப்பு சங்கடங்களை எதிர்கொண்டு வருகின்றது.

தமிழ் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தது மட்டுமல்லாது, தமக்கு எதிரானவர்களின் விமர்சனங்களையும் அது எதிர்கொண்டு வருகின்றது.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் பலர் வேறு தரப்பினர் பக்கம் தாவிச் சென்றமைக்கு இதுவே காரணமாகும். இதை நேர்சீர்செய்ய வேண்டிய கட்டாயத்தினுள் கூட்டமைப்பு தள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரும், அதனால் தமிழர்களுக்கு நேர்ந்த அவலங்களும் பழைய விடயங்களாகவே மாறிவிட்டன.

பன்னாட்டுச் சமூகம் சிரியாவிடம் காட்டி வருகின்ற அக்கறையை இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் காட்டுவதாகத் தெரியவில்லை.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டபோதிலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் நீண்டகால தாமதம் ஏற்பட்டு வருகின்றது.

இலங்கை இதனைத் தனக்குச் சாதகமாக நன்கு பயன்படுத்திக் கொள்கின்றது. இதன் காரணமாகத் தமிழர்களின் துயரங்கள் தொடரவே செய்கின்றன.

அரசியல் ரீதியில் கூட்டமைப்பு தன்னை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமானால், தமிழர்களின் குறைகளைத் தீர்த்து வைப்பதற்கான முயற்சிகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

கொழும்பு அரசும் கூட்டமைப்பு வழங்கி வருகின்ற ஆதரவுக்குப் பிரதியுபகாரமாக தீர்வு தொடர்பாக எதையாவது செய்வதற்கு முன்வர வேண்டும்.

கூட்டமைப்பின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட முடியாதவையெனக்கூற முடியாது. ஆனால் இனவாதிகளுக்கும், மதவாதிகளுக்கும் அஞ்சுகின்ற இந்த அரசு, எதைச் செய்வதற்கும் குழம்பி நிற்கின்றது.

புதுவருடத்துடன் புதிய அரசமைப்பின் உருவாக்கம் தொடர்பான வேலைகள் ஆரம்பிக்கப்படுமெனத் தலைமைகள் கூறியிருந்த போதிலும், அதற்கான சமிக்ஞைகளைக் காண முடியவில்லை.

கூட்ட மைப்பின் தலைவர்கள் புதிய அரசமைப்புத் தொடர்பாக அடிக்கடி நம்பிக்கை வெளியிட்டு வந்துள்ளனர். கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் இதை எள்ளி நகையாடத் தவறவில்லை. ஆனால் கூட்டமைப்பு, நம்பிக்கையைத் தளரவிடாது அரசுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றது.

தெற்கைப் பொறுத்தவரையில் மகிந்த ராஜபக்ச குடும்பத்தின் செல்வாக்கு வளர்ந்து செல்கின்றதே தவிர மங்கியதாகத் தெரியவில்லை.

உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் உற்சாகமடைந்த நிலையில் அவர்கள் காணப்படுகின்றனர்.ஆட்சியைக் கைப்பற்றுவதே அவர்களின் முதன்மை இலக்காகக் காணப்படுகின்றது.

ஜனாதிபதியொருவர் மூன்றாவது தடவையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமென புதிதாக 20ஆவது திருத்தமொன்று கொண்டு வந்து நிறைவேற்றப்படுமானால், அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தலில் மகிந்த மீண்டும் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துவிடும்.

அவர் ஜனாதிபதியாகின்ற வாய்ப்பும் கிட்டிவிடும். இதனால்தான் ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பறித்தெடுப்பதற்கான தீர்மானங்களை மகிந்த தரப்பு எதிர்த்து வருகின்றது.

தேர்தலில் போட்டியிடுவதற்கு மகிந்தவுக்குச் சந்தர்ப்பம் கிடைத்து விட்டால் மகிந்தவின் தம்பி கோத்தபாயவுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படுமெனத் தெரிகின்றது.

நிறைவேற்று அதிகாரங்கள் இவருக்குக் கிடைத்து விட்டால் என்ன நடக்குமென்பதை இந்த நாடே அறியும். தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக இவர்களுடன் பேச முடியுமென எவரும் எதிர்பார்க்க முடியாது.

ஆகவே இந்த அரசின் ஆட்சிக்காலத்தினுள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காவிட்டால் அதை ஒரு போதுமே எதிர்பார்க்க முடியாது.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் எந்தத் தீர்வாக இருந்தாலும் கூட்டமைப்பே அதைப் பெற்றுத்தர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

ஏனைய தமிழ்க் கட்சிகளும் கூட்டமைப்பின் தலையில் பாரத்தைச் சுமத்தி விட்டுத் தாம் ஒதுங்கி நிற்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளன.

இனிவரும் தேர்தல்களும் கூட்டமைப்புக்குச் சோதனைக்களமாகவே அமையப்போகின்றது.இது நெருப்பாற்றை நீந்திக் கடப்பதற்குச் சமமானது.

இவற்றையெல்லாம் வெற்றிகரமாகத் தாண்டிச் சென்றால்தான், அந்த அமைப்பின் எதிர்காலம் பிரகாசமாக அமையுமென்பதைச் சொல்லத் தேவையில்லை.

கூட்டமைப் பின் தலைவர்கள் தீர்க்க தரிசனத்தடன் சிந்தித்துச் செயற்படாது விட்டால் அதன் எதிர்காலம் கேள்விக் குறியாகவே அமையும்.