காசோலையை கொடுத்தவரை அறிந்திருக்கவில்லை: தயாசிறி ஜயசேகர

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கத்தில் அங்கம் வகித்த காலத்தில் சிங்கப்பூடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் உள்ள பாரதூரமான விடயங்கள் குறித்து அமைச்சரவையில் தெளிவுபடுத்தியதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி கடிதம் மூலம் அமைச்சரவைக்கு தெரியப்படுத்தியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இலங்கை - சிங்கப்பூர் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் 17வது உப ஆவணத்திற்கு அமைய இந்த உடன்படிக்கை நிரந்தரமான உடன்படிக்கை. அந்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை விலக முடியாது.

மேலும் உடன்படிக்கைக்கு அமைய மனித வளத்தை இறக்குமதி செய்ய முடியும். தேவையான அளவுக்கு வெளிநாடுகளில் இருந்து மனித வளத்தை வரவழைக்க முடியும்.

இதனை தவிர இலங்கையில் இருக்கும் அமைச்சருக்கு தேவையான வகையில் வரிச்சலுகைகள் வழங்கும் அதிகாரம் கிடைக்கும். உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்தில் இருந்து இந்த விடயங்கள் அமுலக்கு வரும் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, அரசாங்கத்தில் இருந்து விலகுவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்த தீர்மானங்களையும் எடுக்கவில்லை என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கூறியுள்ளார்.

அவர் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த போதும் தற்போது தேசிய அமைப்பாளராக பதவி வகித்துக்கொண்டு பொய்யான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

துமிந்த திஸாநாயக்கவுக்கு ஐக்கிய தேசியக்கட்சியுடன் கொடுக்கல், வாங்கல்கள் இருக்குமாயின் அவர் அந்த கட்சிக்கு சென்று அந்த கொடுக்கல், வாங்கல்களை தீர்த்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அதேவேளை ஒரு தொலைபேசி அழைப்பில் ஒரு மில்லியன் ரூபா கிடைத்தமை சம்பந்தமாக ஊடகவியலாளர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தயாசிறி, அது பொய்யான கருத்து, தனக்கு காசோலையை வழங்கிய நபர் பற்றி தான் அறிந்திருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு அர்ஜூன் அலோசியஸ் 10 லட்சம் ரூபாவை வழங்கியிருந்தமை தொடர்பிலேயே அவர் இந்த பதிலை கூறியுள்ளார்.

எனினும் அலோசியஸ் முதலாளியை தமக்கு நீண்டகாலமாக தெரியும் எனவும் தயாசிறி ஜயசேகர ஊடகங்களிடம் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.