மிஹின் லங்கா விமான சேவை நிறுவனத்தின் பங்குதாரர் கோத்தபாய

Report Print Steephen Steephen in அரசியல்

மிஹின் லங்கா நிறுவனத்தை இலங்கையில் சட்ட ரீதியான நிறுவனமாக பதிவு செய்யுமாறு கோரி சமர்பித்திருந்த விண்ணப்பத்தில் அச்சு பிகைள் இருந்த நிலையில், அந்த நிறுவனத்தை பதிவு செய்ய நிறுவன பதிவாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்ததாக ஸ்ரீலங்கன் விமான சேவை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று தெரியவந்துள்ளது.

நிறுவன பதிவாளர் நாயகத்தின் பிரதிநிதியான இந்திக குணவர்தனவிடம் இன்று மூன்றாவது முறையாகவும் சாட்சியங்களை ஆணைக்குழு பதிவு செய்தது.

இந்திக குணவர்தன, ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், ஸ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் மிஹின் லங்கா ஆகிய நிறுவனங்களில் நடத்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் இன்று சாட்சியமளித்தார்.

மிஹின் லங்கா நிறுவனம் கடந்த 2006 ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி தமது நிறுவனத்தை சட்டரீதியான நிறுவனமாக பதிவு செய்யுமாறு கோரி நிறுவன பதிவாளர் திணைக்களத்திடம் விண்ணப்பித்து இருந்தது.

பதிவாளர் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த விண்ணப்பத்தில் பங்குதார்களாக குறிப்பிடப்பட்டிருந்தவர்களின் பெயர்களை ஆணைக்குழுவில் சமர்பிக்க முடியுமா மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீல் உணம்புவ, சாட்சியாளரிடம் கேள்வி எழுப்பினார்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர, அன்றைய விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, அப்போதைய ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் சஜின்வாஸ் குணவர்தன ஆகியோர் நிறுவனத்தின் பங்குதாரர்கள் என தெரிவித்திருந்தாக இந்திக குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நிறுவனத்தை பதிவு செய்த விண்ணப்பித்தாரியின் பெயராக கோத்தபாய ராஜபக்சவின் பெயர் குறிப்பிட்டிருந்ததாகவும் சாட்சியாளர் ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

விண்ணப்பத்தில் பிழைகள் இருக்கும் போது அதனை திருத்தி விண்ணப்பிக்குமாறு விண்ணப்பிக்கும் தரப்பினரிடம் கோருவது சாதாரண நடைமுறை என்ற போதிலும் விண்ணப்பித்த தரப்பினருக்கு அவ்வாறான கோரிக்கை முன்வைக்கப்பட்டதற்கான எந்த கடிதமும் மிஹின் லங்கா நிறுவனத்தின் ஆவணங்களில் இல்லை என நிறுவன பதிவாளர் நாயகத்தின் பிரதிநிதி கூறியுள்ளார்.

எனினும் கடந்த 2006 ஆம் ஒக்டோபர் 23 ஆம் திகதி விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட பின்னர், ஒக்டோபர் 27 ஆம் திகதி அதாவது நான்கு நாட்களுக்குள் மிஹின் லங்கா தனியார் நிறுவனம் என பதிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.