இவர்களும் அலோசியஸிடம் பணம் பெற்றுள்ளனர்!

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல், வாங்கல்களுடன் சம்பந்தப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியஸிடம் ஜனாதிபதியின் மருமகன் திலினி சுரஞ்சித் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் பணத்தை பெற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அர்ஜூன் அலோசியஸிடம் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க மூன்று முறை 30 லட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அர்ஜூன் அலோசியஸின் பேர்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் இணை நிறுவனமான மெண்டிஸ் சாராய நிறுவனத்தின் மூன்று காசோலைகள் மூலம் இந்த 30 லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

தயாசிறி ஜயசேகரவை போல், சுஜீவ சேனசிங்கவும் இந்த பணம் தனது தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக வழங்கப்பட்டதாக கூறியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் தேர்தல் காலத்தில் இலங்கையில் உள்ள வர்த்தகர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றில் போட்டியிடும் தாம் அறிந்த வேட்பாளர்களுக்கு பணத்தை நன்கொடையாக வழங்குவது வழக்கம் எனவும் இது இலங்கையில் கால காலமாக நடந்து வருவது எனவும் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியிருந்தார்.

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவிடம் தான் பணியாற்றிய காலத்தில் வர்த்தகர்கள் வழங்கிய பணத்தை கட்டுக்கட்டாக எடுத்துச் சென்று கொடுத்துள்ளதாகவும் மேர்வின் சில்வா கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தந்தையான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, அலோசியஸ் முதலாளியுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தவர்.

இதனடிப்படையில், பிரேமதாச குடும்பத்தினருக்கும் அலோசியஸ் குடும்பத்தினருக்கும் இடையில் நீண்டகால தொடர்புகள் இருந்து வருவதாக கூறப்படுகிறது