யாழில் மாவை சென்ற போராட்டத்தில் அமைதியின்மை! கூச்சலிட்டு கத்திய இளைஞர்களால் பரபரப்பு

Report Print Dias Dias in அரசியல்

யாழ். வடமராட்சி கிழக்குப் பகுதியில் வெளிமாவட்ட மீனவர்கள் தங்கி நின்று கடலட்டை பிடிப்பதற்கு எதிராகவும், அவர்களை கைது செய்யுமாறு கோரியும் இன்று யாழில் மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த பேரணி ஆரம்பமாவதற்கு சுமார் 45 நிமிடங்களுக்கு முன்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா யாழ்.கடற்தொழிலாளர் சம்மேளன வளாகத்திற்கு வருகைத்தந்திருந்தார்.

இந்த நிலையில் மாவை சேனாதிராஜாவை அங்கு கூடியிருந்த பெருமளவான இளைஞர்களும், மீனவர்களும் ஒன்றிணைந்து வெளியேறுமாறு கூச்சலிட்டமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது மக்கள் போராட்டம், இங்கு யாரும் வர வேண்டாம் என்பதுடன், மாவை சேனாதிராஜாவை கடுமையாக திட்டியதால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

“நீங்கள் அரசாங்கத்துடன் இணைந்து இதுவரை எங்களுக்குப் பெற்றுத் தந்தது என்ன?, இது மக்கள் போராட்டம்…அரசியலுக்கு இங்கு இடமில்லை, மண்ணெண்ணெய் விலையேற்றத்திற்கு நடவடிக்கை எடுக்காமல் நீங்கள் அரசியல் வாதிகளாக இருந்து என்ன பயன்?” எனக் கடுமையாகக் கூச்சலிட்டுள்ளனர்.

இந்த நிலையில் மாவை சேனாதிராஜாவும், அவரது குழுவினரும் அங்கிருந்து சடுதியாக வெளியேறியதுடன், அவர்கள் வந்த வாகனத்திலேயே திரும்பிச் சென்றுவிட்டனர்.