ஜனாதிபதியாகும் ஆசையில் அமெரிக்க குடியுரிமையை இழக்க தயாராகும் கோத்தா! கம்மன்பில விளக்கம்

Report Print Shalini in அரசியல்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு இரட்டை குடியுரிமை கொண்ட ஒருவரால் முடியாது என்ற கருத்தால் கோத்தபாய ராஜபக்ஸவுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தாம் இரட்டை குடியுரிமை கொண்ட ஒருவர் என்பதால் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அமெரிக்க குடியுரிமை ஒரு தடையாக இருக்காது என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அமெரிக்க குடியுரிமையை துறப்பது தொடர்பான, உண்மையான சட்ட நிலையை விளக்குமாறு கோத்தபாய ராஜபக்ஸ உதய கம்மன்பிலவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பில் விளக்கமளித்த உதய கம்மன்பில,

1952ஆம் ஆண்டின் குடிவரவு மற்றும் குடியுரிமை சட்டத்தில், குடியுரிமையைத் துறத்தல் தொடர்பாக கூறப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின், 49(a) (5) பிரிவு, எந்தவொரு குடிமகனும், தனது குடியுரிமையைத் துறக்க விரும்பினால், எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி அதனை செய்யலாம் என்று கூறுகிறது.

எனினும், தீர்ப்பு வழிச் சட்டம், இரண்டு கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

முதலாவது, அமெரிக்காவில் இருந்து கொண்டு, விண்ணப்பத்தை அளித்தால், அது நிச்சயமாக நிராகரிக்கப்படும்.

இரண்டாவதாக, விண்ணப்பதாரருக்கு வேறு எந்த நாட்டிலும் குடியுரிமை இல்லை என்றால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படக் கூடும்.

அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கு முன்னர், முதலாவதாக, இன்னொரு நாட்டில் குடியுரிமையைப் பெற வேண்டும்.

இரண்டாவதாக, விண்ணப்பப்படிவங்கள், DS4079 , DS4083 இல் கோரப்பட்ட விடயங்களை சேகரிக்க வேண்டும்.

மூன்றாவதாக, அமெரிக்க தூதரகத்தில், குடியுரிமை துறப்பதற்காக அணுக வேண்டும்.

நான்காவதாக, கையெழுத்தை சாட்சிப்படுத்தக் கூடிய இருவருடன், முன்னிலையாக வேண்டும்.

குடியுரிமையை துறப்பதன் மூலம் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்ட பின்னர், ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

அதன் பின்னர், குடியுரிமையை இழக்கும் சான்று DS4083, படிவத்துடன் வழங்கப்படும். இது, தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் போன்றது.

பின்னர், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால், சான்றிதழ் வழங்கப்படும். இது மிகவும் இலகுவாகவும், விரைவாகவும் செய்யக் கூடிய விடயம்.

எனவே, கோத்தாபய ராஜபக்ச அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு, அமெரிக்கக் குடியுரிமை தடையாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.