ஞானசார தேரர் உட்பட 13 பேருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு

Report Print Steephen Steephen in அரசியல்

இரண்டு நபர்களிடம் தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட 13 பேரை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு தலாஹேன பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றை தாக்கி அங்கிருந்த இருவரின் இரண்டு தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட 13 பிரதிவாதிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். இதன்போது வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. சந்தேகநபர்களுக்கு எதிராக 11 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

எனினும் வழக்கை விசாரித்த மேல் நீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் திகதி வழக்கில் இருந்து சந்தேகநபர்களை முற்றாக விடுதலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக சாட்சியங்களை விசாரிக்காது மேல் நீதிமன்றம் சந்தேகநபர்களை விடுவித்துள்ளதாக சட்டமா அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்.