கண்டனத்திற்குரிய பிரதியமைச்சர் பதவிகள் ஏன்?

Report Print Samy in அரசியல்

அமைச்சரவை விரிவாக்கத்தின் போது வடக்கைச் சேர்ந்த இருவருக்குப் பிரதியமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. திடீரென இந்தப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

பதவியைப் பெற்றுள்ள இந்த இருவரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தமிழர். மற்றொருவர் முஸ்லிம்.

பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளவர்களில் தமிழரான அங்கஜன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நெருக்கமானவர்.

மகிந்தவிற்கும் இவர் நெருக்கமானவராக இருந்தாலும், 2015 ஜனாதிபதி தேர்தல் தோல்வியை அடுத்து மைத்திரி பக்கம் சாய்ந்த முதன்மையானவர்களில் வடக்கைச் சேர்ந்த ஒரேயொருவர்.

இதனால் அவர் மீது மைத்திரிபாலவுக்கு எப்போதும் கரிசனை அதிகமே. அதனாலேயே நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற போதும் அவரை தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கினார்.

அண்மையில் அவரைப் பிரதி சபாநாயகர் பதவிக்கு நியமிக்கவும் முன்னின்றார். அது சரிவராமல் போகவே இப்போது பிரதியமைச்சர் பதவி கொடுத்திருக்கிறார்.

பிரதியமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டுள்ள மற்றையவர் முஸ்லிம். வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அங்கு கட்சியைப் பலப்படுத்துவதில் அக்கறையோடு செயற்படுபவர்.

முஸ்லிமான அவர் இந்து கலாசார அமைச்சுக்கும் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்துக் கடும் கண்டனங்கள் எழத் தொடங்கியுள்ளன.

தற்போதைய கூட்டு அரசின் பதவிக் காலம் முடிவதற்கு இன்னும் 2 வருடங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இவர்கள் இருவருக்கும் பிரதியமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கின்ற பின்னணியில், இந்த நியமனங்களும் வந்திருக்கின்றன என்பதும் கவனத்திற்குரியது.

இந்த அபிவிருத்திக் குழுவில் வடக்கு கிழக்கு மாகாணத்தைப் பெரிதும் பிரதிநிதித்துவப்படுத்தும், இந்த அரசை முண்டு கொடுத்துக் காத்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை என்கிற பின்னணியிலும், இந்த நியமனங்கள் முக்கியத்துவம் மிக்கவை.

இவற்றுக்கும் மேலாக, அரசுக்குத் தலையிடி கொடுக்கும் வகையிலான அறப் போராட்டங்களைத் தாம் தொடங்கியிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், அண்மைய மீனவர்கள் போராட்டத்தை முன்வைத்துக் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், ஜனாதிபதியின் இந்த நகர்வுகளும் கவனிக்கத்தக்கவை.

இவை எல்லாம் இணைந்து வடக்கில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ளாரா என்கிற சந்தேகத்தை வலுப்படுத்துகின்றன.

கூட்டு அரசு அல்லாடி வரும் நிலையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முரண்டு பிடிக்க ஆரம்பித்திருக்கும் நிலையிலும் ஐக்கிய தேசியக் கட்சியுடனான தேனிலவு கசந்து விட்ட நிலையிலும் ராஜபக்சக்களைச் சமாளிக்கும் நகர்வுகளுக்குள் மைத்திரி விழுந்து விட்ட நிலையிலும் ஜனாதிபதியின் இந்தப் புதிய நகர்வுகள் இத்தகைய சந்தேகங்களைக் கிளப்புவது புதிதல்ல.

எனினும் புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கான எத்தனங்கள் எதனையும் மேற்கொள்ளாமல், இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கான நகர்வுகளை முன்னகர்த்தாமல், வடக்கில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தும் எத்தனங்கள் எதனையுமே செய்யாமல் வெறுமனே கட்சியை வளர்ப்பதற்காகவும், வாக்குகளைக் கவர்வதற்காகவும் ஜனாதிபதி திட்டமிட்டுச் செயற்படுவாராக இருந்தால் அது ஏற்புடையதல்ல, விசனத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது.

இது போன்ற கட்சி அரசியல் நகர்வுகளால் நாட்டுக்கு நல்லது ஏதும் நடக்கப் போவதில்லை.

- Uthayan