கோத்தபாய வந்தால் நாங்கள் இலகுவாக வெல்வோம்!

Report Print Steephen Steephen in அரசியல்

2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிட்டால், ஐக்கிய தேசியக்கட்சியே அதிகம் மகிழ்ச்சியடையும் என அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளரான அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிட்டால், ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி நிச்சயம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஹரின் பெர்னாண்டோ இதனை குறிப்பிட்டுள்ளார்.

எவருக்கும் எந்த கருத்துக்களையும் சுதந்திரமாக வெளியிட நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இதனால், பலர் தற்போதைய அரசாங்கத்தை பலவீனமான, முதுகெலும்பு இல்லாத அரசாங்கம் என கூறுகின்றனர்.

சில ஊடகங்கள் கூட ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டு வருவதுடன், ஊடகங்களில் உரிமையாளர்களுக்கு தேவையான வகையில் செய்திகள் தயாரிக்கப்படுகின்றன.

சில ஊடகங்களில் கற்பனையாக செய்திகளை உருவாக்கி, பழைய கொள்ளைச் சம்பவங்களை மறந்து விட்டு, அலோசியஸ் என்ற தலைப்பை மாத்திரம் செய்தியாக வெளியிடுகின்றன.

இது நாட்டில் உள்ள அப்பாவி மக்களை ஏமாற்றி மேற்கொள்ளும் விளையாட்டு. பிரதான திருடர்களை மறைத்து, அந்த பெருச்சாளிகளை விட்டு விட்டு, தேர்தலுக்கு அலோசியஸிடம் இருந்து பணத்தை பெற்ற சுண்டெலிகளை பிரதான தலைப்பாக மாற்றுகின்றனர்.

கிளிநொச்சியில், புனர்வாழ்வு பெற்ற புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இராணுவ கேர்ணலுக்கு பெரிய மரியாதையை கொடுத்தனர்.

அப்படியானால் நாட்டில் நல்லிணக்கம் செயற்படுத்தப்படவில்லையா? எமது நாட்டில் இல்லாமல் இருந்த இன ஐக்கியம் உருவாகி வருகிறது.

அவற்றை மீண்டும் இராணுவமயப்படுத்த வேண்டுமாயின் அதற்கான இயலுமை கோத்தபாயவிடம் இருக்கின்றது. கோத்தபாயவிடம் இராணுவமயமான செயற்பாடுகளே உள்ளன.

அந்த முறைக்கு செல்ல வேண்டுமாயின் ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைக்க வேண்டுமாயின் அதற்கான வழியை ஏற்படுத்திக்கொண்டு செல்லலாம். விரும்பியவர்கள் அனைவரும் செல்லலாம்.

கோத்தபாய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவராயின் நாங்கள் அதனை வரவேற்போம். காரணம் எம்மால் இலகுவாக வெல்ல முடியும் எனவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.