நிலக்கரி ஊழலில் பல மடங்கு நிதி மோசடி

Report Print Steephen Steephen in அரசியல்

ஒரே நிறுவனத்தின் ஊடாக நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடியை விட பல மடங்கு நிதி மோசடி நடந்துள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதனை கண்டுபிடிக்க விசேட அதிகாரங்களுடன் கூடிய ஜனாதிபதி ஆணைக்குழு உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நிலக்கரி ஊழல் தொடர்பாக கணக்காய்வாளர் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும். அப்போது என்னிடம் உள்ள அனைத்து தகவல்களையும் வழங்க தயார்.

இந்த நிதி மோசடி மூலம் இலாபம் பெற்ற அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் என பலர் இருக்கின்றனர்.

மேற்படி ஊழல் காரணமாக ஏற்பட்ட நஷ்டத்திற்கான துன்பத்தை மின் கட்டணங்கள் மூலம் நாட்டின் இரண்டு கோடி மக்கள் அனுபவித்து வருகின்றனர் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.