தனி ஆட்சி அமைப்பதே ஐ.தே.கட்சியின் நிலைப்பாடு!

Report Print Rakesh in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்கவேண்டும் என்பதே கட்சியின் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

பொது நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டம், ஒழுங்கு பிரதி அமைச்சராக நளின் பண்டார ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து, ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், “அரசிலிருந்து வெளியேறிய 16 உறுப்பினர்களின் வெற்றிடத்துக்கே நாம் நியமிக்கப்பட்டுள்ளோம்.

புதிதாக ஒரு அமைச்சு கூட உருவாக்கப்படவில்லை. சில ஊடகங்கள் இதைத் தவறாகச் சித்திரிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் இருவரும் சிறப்பாகச் செயற்பட்டே இந்த நியமனங்களைத் தற்போது வழங்கியுள்ளனர்.

இதனூடாக மூத்த உறுப்பினர்களுக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை சிறப்பான ஒன்றாகவே கருதப்படுகின்றது. கடந்த காலத்தில் சிறப்பாகச் செயற்பட்டவர்களுக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அனைவருடனும் கலந்தாலோசித்தே இந்தப் பதவிகளை வழங்கியுள்ளோம் என்பதையும் கூறிக்கொள்ள வேண்டும்.

இதில் எந்தவொரு சிக்கலும் இல்லை. பதவி கொடுத்தாலும் இல்லையென்றாலும் நாம் மக்களுக்கான சேவையை தொடர்ந்தும் முன்னெடுப்போம். மக்கள் சேவைக்குப் பதவிகள் அவசியமில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்கவேண்டும் என்பது கட்சியின் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எஞ்சியுள்ள ஒன்றரை வருட காலத்தில் ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து எமது செயற்றிட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.

இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் பல முக்கிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.