அபிவிருத்தித் திட்டங்களினால் வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை: ஒப்புக்கொண்டது அரசாங்கம்

Report Print Ajith Ajith in அரசியல்

வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக அந்த மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த போதுமான அழுத்தம் பிரயோகிக்கப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக ஜனாதிபதி தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள செயலணி குறித்து, அமைச்சரவையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மோதல்நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் அந்த பகுதிகளில் சமூகம் மற்றும் பொருளாதாரம் அபிவிருத்திக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் அந்த பிரதேச மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அந்த வேலைத்திட்டங்களின் ஊடாக போதுமான அழுத்தம் பிரயோகிக்கப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த பகுதிகளில் அரசாங்கத்தின் பல்வேறு நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களை வழிநடத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் மீளாய்வுக்கு உட்படுத்தல் என்பனவற்றுக்காக, ஜனாதிபதியின் தலைமையின் கீழ் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த செயலணியில் பிரதமர், மாகாண ஆளுநர்கள், மாகாண செயலாளர்கள், இராணுவம் மற்றும் காவற்துறையினர் உள்ளடங்களாக இந்த செயலணியை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.