வடக்கு செயலணியை குழப்பும் நோக்கத்தில் வடமாகாண சபை உறுப்பினர்!

Report Print Sumi in அரசியல்

வடக்கு செயலணியை குழப்பும் நோக்கத்தில் வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் செயற்படும் விதம் குறித்து தனது கண்டனத்தை யாழ். மாநகர சபை உறுப்பினரும் யாழ்ப்பாண அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான கே.எம் நிலாம் தெரிவித்துள்ளார்.

மாகாண சபையில் கடந்த அமர்வில் வடக்குச் செயலணி செயற்படும் விதம் பற்றியும் முஸ்லிம்களின் தற்போதைய மீள்குடியேற்றத்தை தடை செய்யும் எண்ணத்துடன் வடக்கு செயலணியை குழப்பும் நோக்கத்தில் சில கருத்துக்கள் மாகாண சபை உறுப்பினர் வெளியிட்டதை கண்டித்தே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தான் சார்ந்திருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியில் நிலைத்து இருக்க வேண்டும் என்ற குறுகிய எண்ணத்துடன் தனது அரசியலை தக்க வைத்துக் கொள்வதற்காக வடக்கில் செல்வாக்கு இழந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை வடக்கு செயலணியில் உள்வாங்கும் போது தனது கட்சியின் பிரதிநிதியையும் உள்வாங்க வேண்டும் என கோரி வருகின்றார்.

இதனால் அமைச்சர் ரிசாத் பதியுதீன் வடக்கு செயலணியை விட்டு வெளியேறுவார் என்ற கபட நோக்கத்தை கொண்டு மீண்டும் மீண்டும் ஒரு இனச் சுத்திகரிப்புக்கு தரகராக செயற்படுவது மக்களுக்கு தெளிவாக தெரிகின்றது.

காரணம் அவரே தனது உரையில் செயலணியின் நிதிகள் தொடர்ந்து அரசாங்கத்தினால் இடம்பெயர்ந்த தமிழ் பேசும் மக்களிற்கு வழங்கப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் மீண்டும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடை ஏற்படுத்துவதற்காக உறுதியுடன் செயற்படுவதை காண முடிகிறது.

இவருடைய கோபம் முஸ்லிம் மக்களின் மேல் தான் என்பது புலனாகிறது. இவரை யாழ். முஸ்லிம்கள் நிராகரித்து விட்டனர் என்பது மக்கள் இவருக்கெதிராக மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்கள் தக்க உதாரணங்களாகும். இவர் யாழ்ப்பாண முஸ்லிம் நகரத்திற்கு ஆயுதம் தாங்கிய பொலிஸுடன் வருகிறார். இதுவே மற்றுமொரு ஓர் உதாரணமாகும். மேலும் ஒரு நிறுவனத்தின் ஏர்ஜண்டாக செயற்படுகிறார் என்பதும் உண்மையாகும்.

அமைச்சர் ரிசாத் பதியுதீன் உட்பட பல அமைச்சர்கள் உள்வாங்கப்பட்டுள்ள விசேட வடக்கு செயலணியினால் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு சுமார் 51 வீடுகள் பாதைகள் பல கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இதற்காக எமது அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களுக்கு யாழ் முஸ்லீம்கள் சார்பாக நன்றிகளை தெரிவிக்க விரும்புகின்றேன்.

எனவே தான் வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதி அல்ல என்பது மேற்சொன்ன விடயங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் புரியும் என நினைக்கின்றேன்.

அத்துடன் இவருடைய இனவாத கருத்துக்கள் இவருடைய தனிப்பட்ட கருத்துக்களை தவிர யாழ் முஸ்லிம்களின் கருத்துக்கள் அல்ல. அமைச்சரின் வளர்ச்சியும் அபிவிருத்தியும் தாங்கிக் கொள்ள முடியாத அய்யூப் அஸ்மின் பிழையான கருத்தை வெளியீடுகிறார்.

இவர் அணையப் போகும் விளக்கு எவ்வாறு பிரகாசமாக சற்று ஒளிப்பது வழக்கமோ அது மாதிரி தான் செயற்படுகின்றார் என குறிப்பிட்டார்.