மக்களுக்கு வாழ்வளிக்கக் கூடிய விதத்தில் தங்கள் பதவிகளைப் பிரயோகிக்க வேண்டும்: துரைராசசிங்கம்

Report Print Navoj in அரசியல்

யாரோ ஒருவருடைய உளவியல் பிரச்சினையே இந்த கிரான்புல்சேனை அணைக்கட்டு விடயத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

இன்றைய தினம் கிரான்புல்சேனை அணைக்கட்டு தொடர்பில் மேற்கொண்ட களவிஜயத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிரான்புல்சேனை அணைக்கட்டு வருடாவருடம் கட்டப்படுவதும், வெள்ளம் அதிகரித்து வருகின்ற போது அது உடைப்பெடுப்பதும், வெள்ளம் வடிகின்ற நிலைமையைப் பாhத்து அதனை மீளக்கட்டி விவாயிகளுக்கு நீர் கொடுப்பது என்பதும் நடைமுறையிலே பல ஆண்டுகாலமாக நடைபெற்று வருகின்ற விடயம் ஆனால் இம்முறை இதற்கு சில இடர்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன.

உண்மையில் திங்கட்கிழமை நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலே பொறியியலாளர் இதனைக் கட்டித் தருவதாக உத்தரவாதம் அளித்திருக்கின்றார்.

ஆனால் இதற்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உயர்மட்டத்தில் இருந்து வருகின்ற அழுத்தத்தின் காரணமாக இந்தச் செயற்பாடுகள் தடைப்படுகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.

வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு வந்து இப்பிரதேசத்திற்கு வழங்கலாம் என்று உயரதிகாரி ஒருவர் நினைத்திருக்கின்ற அந்த விடயத்தை சரி என்று நிரூபிக்கக்கூடிய ஒரு அக்கினிப் பரீட்சையிலே அவர் இறங்கியிருக்கிறார்.

இந்த அக்கினிப் பரீட்சையில் காரணமாக குளத்துவெட்டை, சின்னவெளி, சின்னாளம்வெளி போன்ற பல ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற பயிர்கள் தற்போது வாடிக் கொண்டிருக்கின்றன.

என்ன முயற்சி எடுத்தாலும் கூட இந்தப் பிரதேசத்திற்கு வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல முடியாது. இது விவசாயிகளின் அனுபவம் மட்டுமல்ல இந்தக் கிரான்புல் அணைக்கட்டு தொடர்பாக அக்கறை கொண்டு வேலை செய்ய எல்லா நிர்ப்பாசன அதிகாரிகளுடையதும், பொறியியலாளர்களுடையதுமான அபிப்பிராயம் அதுவாகத்தான் இருக்கின்றது.

எனவே இதனைக் கல்கட்டாக கட்டுவதற்காக கடந்த வருடம் இறுதிப் பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது சொல்லப்படுகின்ற விடயம் என்னவென்றால் இதற்கான வரைபு இன்னும் வரையப்படவில்லை.

அத்துடன் இன்னும் அரைப்பங்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அற்றில் அப்போது நீர் இருந்ததன் காரணமாக அந்தப் பரிசோதனை முற்றுப்பெறவில்லை. இந்த காலபோகத்தின் பின் அதனைத் தொடரவிருக்கின்றார்கள்.

எனவே அந்த விடயமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அதே நேரத்தில் இன்னும் 03 நாட்களுக்குள் இப்பிரதேச வயல்நிலங்களுக்கு நீர் பாய்ச்சாது விட்டால் குடலையாக இருக்கின்ற இந்தப் பயிர்கள் அனைத்தும் தீய்ந்து போகக் கூடிய ஒரு நிலை இருக்கின்றது. இதனால் எமது விவசாயிகள் பெரிதும் விரக்திப் பட்டிருக்கின்றார்கள்.

இந்த விடயத்தின் தார்ப்பரியத்தை நீர்ப்பாசனத் திணைக்களம் கவனத்தில் எடுத்துக் கொண்டு உடனடியாக இந்த மண் அணைக்கட்டு அமைக்கும் பணியை ஆரம்பிக்க வேண்டும்.

இந்த நிரந்தர அணையை அமைப்பது தொடர்பில் நாங்கள் தொடர்ந்து செயற்பபட்டு வருகின்றோம். இதற்கு பிரன்ஸ் ஏஜென்சி என்ற நிறுவனம் பூரண நிதி ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராக இருக்கின்றது. நிதி பற்றி எவ்வித பிரச்சனையும் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்திருக்கின்றது.

எனவே யாரோ ஒருவருடைய உளவியல் பிரச்சினையே இதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அதனை அப்பால் நகர்த்தி விட்டு மக்களுக்கு வாழ்வளிக்கக் கூடிய விதத்தில் தங்கள் பதவிகளைப் பிரயோகிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.