வறுமையில் 3 ஆவது இடத்தில் மட்டக்களப்பு : அதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்

Report Print Navoj in அரசியல்

கிரான்புல்சேனை அணைக்கட்டு என்பது விவசாயிகளின் மிக முக்கியமான மூலோபாயத் திட்டமாக இருப்பதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை விளையாட்டாக எண்ணாமல் அமைச்சரும், அதிகாரிகளும் நேர் கணியமாகச் சிந்தித்து மிக விரைவாக இதற்கான நிரந்தர கல் அணையை அமைத்து விவசாயிகளின் நீண்ட கால அபிலாசையை நிறைவேற்ற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இன்றைய தினம் கிரான்புல்சேனை அணைக்கட்டு தொடர்பில் மேற்கொண்ட களவிஜயத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

உடைப்பெடுத்த கிரான்புல்சேனை அணைக்கட்டினை உடனடியாக மீள அமைத்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்ற ஒரு தீர்மானம் கடந்த 11ம் திகதி இடம்பெற்ற ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

இந்தத் தீர்மானத்திற்கு அக்கூட்டத்தில் இருந்த அரசியற் பிரமுகர்கள், அதிகாரிகள் அனைவரும் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் இல்லாமல் ஏகமனதான விருப்பினைத் தெரிவித்தார்கள்.

புதன்கிழமை இதற்குரிய வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து இந்த அணையைக் கட்டி விவசாயிகளின் நீர்ப்பாசனத் தேவையை நிறைவேற்றுவதாக அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றதா என்பதை அறிவதற்காக இன்று நாங்கள் களவிஜயமொன்றை மேற்கொண்டோம். இங்கு வந்து பார்த்த போது இங்கு வேலைகள் எதுவும் நடைபெறவில்லை. இது தொடர்பாக இதற்குப் பொறுப்பான பொறியியலாளர் பார்த்தசாரதி மற்றும் பிரதிப் பணிப்பாளர் அசார் அவர்களிடமும் தொடர்பு கொண்டு விவாதித்த போது இதனை இப்போதே உடனடியாகத் தொடங்குவதாக உத்தரவாதம் அளித்திருக்கின்றார்கள்.

இதனை மேற்கொள்கின்ற போது ஏற்கனவே இருக்கின்ற நீர்வரும் வழிகளைத் தடை செய்யாமல் இந்த அணைக்கட்டினைக் கட்டிக் கொடுக்க வேண்டியது விவசாயிகளின் முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

இந்த இடத்தில் உத்தரவாதம் தந்தவர்கள் இவ்விடயத்தை மிக விரைவில் நிறைவேற்ற வேண்டும். இதற்கு எவரும் தடையாக இருக்கக் கூடாது. இவ்விடயம் ஒரு சுமூகமான முறையில் நிறைவேற்றப்பட வேண்டும் எனறே நாங்கள் எண்ணுகின்றோம்.

அதிகாரிகள் விவசாயிகளின் நலன்களுக்காகவே நியமிக்கப்பட்டவர்கள். எனவே விவசாயிகள் சார்ந்த விடயத்தில் எவ்வளவு தூரம் இறங்கிச் செயற்பட வேண்டுமோ அந்தளவு இறங்கிச் செயற்பட வேண்டும். இல்லவிடில் அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் எற்படுகின்ற போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதாரம் தான் பாதிக்கப்படும்.

ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டம் வறுமையில் 03வது இடத்தில் இருக்கின்றது. இதனை நிவர்த்தி செய்வதற்கு எமது அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் எங்களுக்கு அவசியமாக இருக்கின்றது. எனவே அதிகாரிகள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.