சுமந்திரனை படுகொலை செய்ய மீளவும் திட்ட தீட்டிய விடுதலைப் புலிகள்: சிங்கள ஊடகம்

Report Print Kamel Kamel in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்வதற்கு மீளவும் தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டம் தீட்டியதாக வார இறுதி சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுமந்திரனை ஏற்கனவே இரண்டு தடவைகள் படுகொலை செய்ய முயற்சித்துள்ளதாகவும், இது நான்காவது தடவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 22ஆம் திகதி ஒட்டுசுட்டான் - புதுக்குடியிருப்பு வீதியில் மோட்டார் போக்குவரத்து பணிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களை கைது செய்திருந்தனர்.

இதன்போது, வெடிபொருட்கள், புலிகளின் சீருடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இந்த நபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

தேசியப் புலனாய்வுப் பிரிவின் தகவல்களுக்கு அமைய இந்த நபர்கள் சுமந்திரனை படுகொலை செய்வதற்கு முயற்சித்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

பொட்டு அம்மான் தலைமையிலான புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான தினேஸ் என்பவரே இந்தக் குழுவிற்கு தலைமை தாங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்புடன் புலிகள் மீளவும் தலைதூக்க முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுமார் இருநூறு பேரை கொண்ட கும்பல் ஒன்று புலிகளின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு முயற்சிப்பதாக புலனாய்வு பிரிவினை மேற்கோள்காட்டி சிங்களப் பத்திரிகையானது இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.