வடக்கு, கிழக்கில் சம்பந்தனுக்கு தெரியாமல் அரசாங்கம் செய்த பாரிய செயற்பாடு!

Report Print Ajith Ajith in அரசியல்

வடக்கு, கிழக்கில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் சீன நிறுவனத்துக்கு கையளிக்கப்பட்டுள்ளமை குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் சீன நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறித்து இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கவலை வெளியிட்டு, கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இந்த நிலையில், குறித்த வீடமைப்புத் திட்டம் சீன நிறுவனமொன்றுக்கு கையளிக்கப்பட்டமை குறித்து தமக்கு தெரியப்படுத்தப்படவில்லை என சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னதாக குறித்த சீன நிறுவனம் கடந்த மார்ச் மாதம் பதுளையில் அமைத்த மாதிரி வீட்டைப் பார்வையிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, அதுபோன்ற வீடுகளை வடக்கு, கிழக்கில் அமைப்பதற்கு இணங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரி வீட்டை அடிப்படையாக கொண்டு வடக்கு கிழக்கில் வீடுகளை அமைக்க இணங்குவதாக, அமைச்சர் சுவாமிநாதனுக்கு, இரா.சம்பந்தன் கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில், சீன நிறுவனம் வடக்கு, கிழக்கில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவளித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோது பதிலளித்துள்ள அவர்,

'இது ஒரு சீனாவின் திட்டம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. ஏனைய விபரங்களும் தங்களுக்குத் தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது முன்னர் பரிந்துரைக்கப்பட்ட உலோக வீடுகளுக்கு மாற்றானதாக அறிவிக்கப்பட்டது. கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், மலையகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வீடுகளைப் பார்வையிட்டு, திருப்தி வெளியிட்டனர்.

ஆனால் இப்போது தான், இது ஒரு சீனத் திட்டம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்படும், மூலப் பொருட்கள் தொடர்பாகவும் சில கேள்விகள் எழுப்பப்டுகின்றன.

இது எமக்கு கவலை அளிக்கிறது. எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று பார்வையிட்ட போது, சிலவற்றை அறியவில்லை. இது எப்படிப் போகிறது என்று பார்ப்போம் என்று சம்பந்தன் தெரிவித்துள்ளார்.