சகவாழ்வால் மீண்டும் தலைதூக்கியுள்ள பயங்கரவாதம்: கூட்டு எதிர்க்கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

சகவாழ்வு என்ற போர்வையில் பயங்கரவாதிகளுக்கு கப்பம் வழங்கி நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியை சீர்குலைக்க வேண்டாம் என கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு பிரதானிகளை சிறையில் அடைத்து, அரச புலனாய்வு பிரிவை பலவீனப்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் சகவாழ்வு மூலம் நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைத்தூக்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டிய நகரில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பை தேசிய ரீதியாக தோற்கடித்தாலும் சர்வதேச ரீதியான அவர்கள் மீண்டும் எழுச்சி பெற முடியும் என கூட்டு எதிர்க்கட்சி அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியது.

எனினும் அதனை நிராகரித்த அரசாங்கத்தின் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் முல்லைத்தீவில் கிளைமோர் குண்டு, புலிகளின் சீருடைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து தனக்கு தெரியாது என ஊடக சந்திப்பில் கூறினார்.

ஆனால், பயங்கரமான ஆயுதங்களுடன் இரண்டு பேரை கைது செய்ததாக பிரதேச பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் மூலம் வடக்கில் விடுதலைப் புலிகள் என்ற பெயரில் இல்லாமல் வேறு பெயரில் ஆபத்தான பயங்கரவாத குழு உருவாகி வருகிறது என்பதை நாங்கள் அரசாங்கத்திற்கு கூறி வைக்கிறோம்.

பயங்கரவாதிகளின் வழக்கு திரும்ப பெறப்பட்டமை, பாதுகாப்பு பிரிவின் முக்கியஸ்தர்கள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் இந்த நிலைமை உருவாக காரணமாக இருக்கலாம் என நாம் கருதுகிறோம்.

புலனாய்வுப் பிரிவுகள் முடங்கியுள்ளன. புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அனைவரும் சிறைச்சாலைகளில்.

இந்த நிலைமையில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர் எனவும் ரஞ்சித் சொய்சா குறிப்பிட்டுள்ளார்.