தமிழர் நலனுக்காக ஐக்கியப்பட வேண்டுமாக இருந்தால் கொள்கைப்பிடிப்பு முக்கியமானது: சுரேஸ் பிரேமச்சந்திரன்

Report Print Thileepan Thileepan in அரசியல்

தமிழர் நலனுக்காக ஐக்கியப்பட வேண்டுமாக இருந்தால் கொள்கைப்பிடிப்பு என்பது முக்கியமானது. கொள்கையின் அடிப்படையிலேயே ஐக்கியப்பட முடியும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னிணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னிணியின் செயலதிபர் பத்மநாபாவின் 28வது சிரார்த்ததினமான தியாகிகள் தினம் இன்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

“முதலமைச்சர் விக்னேஸ்வரின் நூல் வெளியீட்டில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் என்ன கதைக்கப்போகின்றார் என்று தமிழ் மக்கள் நிச்சயம் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

அரசியல் சாசனம் மற்றும் இன்றைய நிலைமைகள், தமிழ் மக்களுக்கு இடையேயான ஐக்கியம், எதிர்காலத்தில் இந்த போராட்டத்தை எவ்வாறு எடுத்துச்செல்ல போகிறார் என்ற கருத்துக்களை தமிழ் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

அவ்வாறான கருத்துக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்ற அடிப்படையில், தமிழ் மக்களின் தலைவராக எல்லோரும் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் என்ன பேசப்போகின்றார் என்பதில் மக்கள் அவதானமாகவே இருக்கின்றார்கள்.

ஆனால் அண்மைய விடயங்களை பார்க்கின்ற போது ஏதாவது உருப்படியாக வருமா என்பது கேள்விக்குறியே. ஏனெனில் கொழும்பின் நிலைமைகள் அடுத்த தேர்தலை மையமாக வைத்து காய்களை நகர்த்துகின்ற வேலைதான் நடக்கின்றது.

மாகாண சபை தேர்தலில் மைத்திரிபால அணியோ, ரணில் விக்கிரமசிங்க அணியோ தோற்றுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.

ஆகவே மாகாணசபை தேர்தல்கள் இடம்பெறுவதற்கு முன்னராகவே ஜனாதிபதி தேர்தலை வைத்து யார் வெற்றி பெறுகின்றார் என்பதை பார்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாக கருத்துக்கள் வருகின்றன.

தேர்தல் வரும் போகும். ஆனால் தமிழ் மக்களுக்கு எவ்வாறு தீர்வை பெற்றுக்கொள்ளப்போகின்றோம் என்பதுதான் இங்கே முக்கிய விடயம்.

பல இழப்புக்களையும், தியாகங்களையும் சந்தித்திருக்கின்றோம். இவையெல்லாம் இடம்பெற்றது தமிழ் மக்கள் இந்த மண்ணில் கௌரவமாக வாழ வேண்டும் என்பதற்காகதான்.

இந்தநிலையில் தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமை என்பது தேவை. ஆனால் அந்த ஒற்றுமை எதன் அடிப்படையில் என்பதே முக்கியமானது.

ஏல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து அரசாங்கத்துடன் சங்கமமாவது என்பதன் அடிப்படையிலா? அல்லது நாங்கள் ஒரு கொள்கையை முன்வைத்து அதனை எவ்வாறு நடைமுறைக்கு கொண்டு வருவது என்பதன் அடிப்படையிலா? ஆகவே அவ்வாறான அடிப்படைகள் உருவாக்கப்பட வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது ஈ.பி.ஆர்.எல்.எவ் வைத்த குற்றச்சாட்டு கூட்டமைப்புக்கு வடிவமில்லை. தலைவரை தவிர செயலாளரோ அல்லது பொருளாளரோ என்ற கட்டமைப்பு இல்லை. அதில் கேள்வி கேட்க முடியாது.

முடிவெடுப்பது சம்பந்தனும், சுமந்திரனுமாகத்தான் ருக்கின்றார்கள். மாவையும் அல்ல செல்வம் அடைக்கலநாதனும் அல்லது சித்தார்த்னும் அல்ல முன்பு நானும் இருந்த போதும் கூட முடிவுகளை எடுக்க முடியாது.

ஓர் ஐக்கியத்தை உருவாக்கின்ற போது அது ஏன் எதனை நோக்கி போக வேண்டும் என்ற விளக்கம் இருக்க வேண்டும். எல்லாவற்றையும் மறக்கலாம்.

ஆனால் புதிய ஐக்கியத்துடன் செல்கின்ற போது ஒர் கொள்கையின் அடிப்படையில் வேலைத்திட்டங்களை வகுத்து அந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து செல்லக்கூடிய வகையில் உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலம் சரி நாம் எவ்வாறு அதை முன்னகர்த்த போகின்றோம் என்பதில்தான் அந்த ஐக்கியம் அமைந்துள்ளது.

ஆனால் எம்மவர்கள் அதனை செய்கின்றார்களா என்றால் நிச்சயமாக இல்லை என்பதுதான் அதற்கான பதில். முதலமைச்சர் கடந்த பல ஆண்டுகளாக பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

ஆகவே ஒன்றுபட்ட ஒர் கொள்கையின் கீழ் எல்லோரும் ஒன்றாக வரவேண்டுமாக இருந்தால் அந்த கொள்கைப்பிடிப்பு என்பது முக்கியமானது. பேச்சுவார்த்தை என்பது முக்கியமானதே.

ஆனால் பேச்சுவார்த்தை என்பது எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து பேசுவது அல்ல. அந்த விடயங்களில் நாம் எவ்வாறு இறுக்கமாக இருக்கின்றோம். நாடாளுமன்றத்திலும், மாகாணசபையிலும் இருக்கும் வரைக்கும் இருந்து விட்டு போகலாம் என்பது தவறானது” என தெரிவித்தார்.