பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? விமலின் கட்சி எடுத்துள்ள தீர்மானம்

Report Print Rakesh in அரசியல்
128Shares

இறுதி நேரம்வரை காத்திருக்காது பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரை முன்கூட்டியே பெயரிடுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுப்பதற்கு தேசிய சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஸவை நேரில் சந்தித்து இதற்கான காரணங்களை முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ஸ தெளிவுபடுத்துவாரென அவரது கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

மஹிந்த ராஜபக்ஸவால் பெயரிடப்படும் வேட்பாளருக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் இணக்கம் வெளியிட்டுள்ளன.

எனினும், வேட்பாளர் யாரென்பதை முன்கூட்டியே அறிவித்தால் அவரை முடக்குவதற்கு அவருக்கு எதிராக தவறான விம்பமொன்றை உருவாக்குவதற்கு ஆளுந்தரப்பு முயற்சிக்கலாம்.

எனவே, தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகே வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்பதே கூட்டு எதிரணியின் சில உறுப்பினர்களின் கருத்தாக இருக்கின்றது.

இக்கூற்றை ஏற்க விமலின் கட்சி மறுத்து வருகின்றது. ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பதை அறிவிக்காவிட்டால், அது பொது எதிரணிக்குள் பிளவை உருவாக்குவதற்கு வழிவகுத்துவிடும்.

ஒரு நபரை அறிவித்துவிட்டால் அனைவரும் அவருடன் அணிதிரளும் வாய்ப்பு உதயமாகும். அத்துடன், அரசு நடவடிக்கை எடுத்தால்கூட, அது வேட்பாளருக்கு சாதகமாகவே அமையும். என்பதே விமலின் கட்சி நிலைப்பாடாக இருக்கின்றது.

இவை உட்பட மேலும் பல காரணங்களையே மஹிந்தவை நேரில் சந்தித்து விமலின் கட்சி குறிப்பிடவுள்ளது.