சீன நிறுவனத்திடம் இருந்து தனது தேர்தல் பிரசார செலவுக்கு 7.6 மில்லியன் வழங்கவில்லை என்று சத்தியக்கடிதத்தை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கோருவதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை என்றால், அவர் பணத்தை பெறவில்லை என்று நம்ப முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ராகலை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஐக்கிய தேசியக்கட்சி உரிய நேரத்தில் அறிவிக்கும். ஐக்கிய தேசியக்கட்சியிடம் வேட்பாளர்கள் இருக்கின்றனர். மலையகத்தை சேர்ந்த ஒருவரும் அதில் அடங்குகிறார்.
தேர்தல் காலத்தில் சீன நிறுவனம் ஒன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு 7.6 மில்லியன் டொலர்களை வழங்கியதாக கூறப்படும் சம்பவமே தற்போது பிரதான தலைப்பாக உள்ளதை நீங்கள் அறிவீர்கள். இது பெருந்தொகையான பணம்.
இந்த பணத்தை சீன நிறுவனம் ராஜபக்சவுக்கு ஏன் வழங்க வேண்டும். எமக்கு அப்படியான பெருந்தொகை பணம் கிடைத்ததில்லை.
அன்று வெள்ளை ஏகாதிபத்தியவாதிகளிடம் அடிமையாக இருந்த எமது நாடு. தற்போது சீனாவின் ஏகாதிபத்திற்கு அடிமையாகியுள்ளதா என்று கேட்க விரும்புகிறேன்.
மகிந்த ராஜபக்சவுக்கு கெடுதியான ஏதேனும் நடக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. அவர் நாட்டின் தலைவர் என்ற வகையில் நாட்டுக்கு சேவை செய்துள்ளார். போரை முடிவுக்கு கொண்டு வந்தார்.
எவ்வாறாயினும் ராஜபக்ச தனக்கு 7.6 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கவில்லை என்று சத்தியக் கடித்தை வழங்குமாறு கேட்கின்றேன். அப்போது அவர் பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை என்று நாங்கள் நம்புவோம் எனவும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
புகைப்படங்கள் - திருமால்