ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு எரிபொருள் விநியோகிப்பதை நிறுத்துவதை விட சம்பந்தப்பட்ட பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ள முயற்சி எடுப்பதாக கனிய எண்ணெய் வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இன்று தெரிவித்துள்ளார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் 6 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேல் கடனை செலுத்த வேண்டியுள்ளதால், அந்த நிறுவனத்திற்கான எரிபொருள் விநியோகித்தை நிறுத்த போவதாக கூட்டுத்ததாபனம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இது சம்பந்தமாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம், பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பெருந்தொகை பணத்தை செலுத்த வேண்டியுள்ளது. இந்த பணத்தை பெற்றுக்கொள்ள நாங்கள் தொடர்ந்தும் விமான சேவை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். பணத்தை செலுத்த ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் இணங்கியது. எனினும் இதுவரை பணத்தை செலுத்தவில்லை.
இது குறித்து அமைச்சு செயலாளர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், நான் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவேன். அதுவும் வெற்றியளிக்கவில்லை என்றால், அமைச்சரவைக்கு தெளிவுப்படுத்தி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வோம்.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் என்பது அரசுக்கு சொந்தமான நிறுவனம். அந்த நிறுவனத்தை நாம் பாதுகாக்க வேண்டும். அரச நிறுவனங்களில் பிரச்சினைகள் ஏற்பட்ட போது கடந்த காலத்தில் வழக்குகளை தொடர்ந்து பிரச்சினைகளை பெரிதாக்கினர். ஆனால், தற்போது ஜனாதிபதியும் பிரதமரும் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்கின்றனர் எனவும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.